2025-ஆம் ஆண்டில் அபுதாபி ஏர்போர்ட்ஸ் ஆனது உலகெங்கிலும் இருந்து 33 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைப் பதிவு செய்துள்ளதாக தரவுகள் வெளிவந்துள்ளது. இது அபுதாபியின் வரலாற்றில் மிக உயர்ந்த வருடாந்திர பயணிகள் போக்குவரத்து ஆகும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை, சையத் சர்வதேச விமான நிலையம் (AUH) உட்பட, அபுதாபி விமான நிலையங்களால் இயக்கப்படும் ஐந்து விமான நிலையங்களையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய போக்குவரத்துத் தரவுகளின்படி, அமீரகத்தின் விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து கடந்த மூன்று ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதில் சையத் சர்வதேச விமான நிலையமானது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா (EMEA) பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாபெரும் விமான நிலையமாக உருவெடுத்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
சையத் சர்வதேச விமான நிலையத்தின் உலகளாவிய வலையமைப்பின் விரிவாக்கமே இந்தச் சாதனைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களைத் தொடங்கியதால், பிரபலமான இடங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது. மேலும் EMEA மற்றும் ஆசியா முழுவதும் இது இணைப்புகளை வலுப்படுத்தியது. இதன் காரணமாக 2025 ஆண்டில் விமான நிலையம் 39 புதிய வழித்தடங்களை சேர்த்ததுடன், ஏழு புதிய விமான நிறுவனங்களை வரவேற்றதும் முக்கிய பங்களிப்பாகும்.
மொத்த பயணிகள் போக்குவரத்தில் சுமார் 98 சதவீதத்தையும் மற்றும் விமான இயக்கங்களில் 73 சதவீதத்தையும் சையத் விமான நிலையம் கையாண்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2025-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் இந்த விமான நிலையம் 8.59 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13.8 சதவீதம் அதிகமாகும்.
இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு விரிவடைந்த வலையமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், யூரோவிங்ஸ், ஜசீரா ஏர்வேஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் புதிய சேவைகளைத் தொடங்கியதுடன், ஏற்கனவே உள்ள சேவைகளையும் விரிவுபடுத்தியது.
இது குறித்து அபுதாபி விமான நிலையங்களின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி அகமது ஜூமா அல் ஷமிசி கூறுகையில், இந்தச் சாதனை, அதிகரித்து வரும் உலகளாவிய பயணத் தேவையைப் பூர்த்தி செய்ய எங்கள் அமைப்பு தயாராக இருப்பதையே பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அபுதாபியை ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக நிலைநிறுத்துவதற்கு ஆதரவாக சரக்கு மற்றும் தளவாட நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் அதே வேளையில், வளர்ச்சியைத் தக்கவைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டானது அபுதாபி எமிரேட்டின் விமான நிலையங்களுக்கு பல முக்கிய மைல்கற்களையும் குறித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில், தொடர்ந்து 19வது ஆண்டாக இரு இலக்கப் பயணிகள் வளர்ச்சி மற்றும் ஆண்டுப் பயணிகள் போக்குவரத்து முதன்முறையாக 3 கோடிப் பயணிகளைத் தாண்டியது ஆகியவையும் அடங்கும்.
இந்த வலையமைப்பில் உள்ள மற்ற விமான நிலையங்களும் வளர்ச்சியைக் கண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, அல் பதீன் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையம் 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விமானப் போக்குவரத்தில் 15.3 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்தது, அதே சமயம் அல் அய்ன் சர்வதேச விமான நிலையம் அதே காலகட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு 48.1 சதவீதப் பயணிகள் எண்ணிக்கையில் உயர்வைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
கூடுதலாக, சையத் சர்வதேச விமான நிலையம் 2025 ஆம் ஆண்டில் பல சர்வதேச விருதுகளைப் பெற்றது. இதில் ஃபிரான்டியர் விருதுகளில் சில்லறை வர்த்தகத்திற்கான சிறந்த விமான நிலையம் என்ற விருதும், ஏவியேஷன் பிசினஸ் விருதுகளில் அங்கீகாரமும் அடங்கும். மேலும், வாடிக்கையாளர் அனுபவம், அணுகல்தன்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளுக்கான அங்கீகாரங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel