ADVERTISEMENT

துபாய் டியூட்டி ஃப்ரீயின் அமோக விற்பனை: ஜனவரி மாதத்தில் 858 மில்லியன் திர்ஹம் விற்பனையை பதிவு செய்ததாக அறிவிப்பு!!

Published: 1 Feb 2026, 8:17 PM |
Updated: 1 Feb 2026, 8:17 PM |
Posted By: Menaka

துபாயின் புகழ்பெற்ற துபாய் டியூட்டி ஃப்ரீ, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் செலவினம் அதிகரித்ததன் காரணமாக, 2026 ஆம் ஆண்டை தனது இதுவரை இல்லாத மிகச் சிறந்த ஜனவரி மாதச் செயல்திறனுடன் தொடங்கியுள்ளது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சுமார் 858.21 மில்லியன் திர்ஹம் விற்பனையைப துபாய் டியூட்டி ஃப்ரீ பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.53 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

டிசம்பர் 2025 (922.77 மில்லியன் திர்ஹம்) மற்றும் நவம்பர் 2025 (876.56 மில்லியன் திர்ஹம்) மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 2026 இப்போது துபாய் டியூட்டி ஃப்ரீயின் வரலாற்றில் மூன்றாவது அதிக விற்பனை செய்யப்பட்ட மாதமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் அதிகபட்ச தினசரி விற்பனை ஜனவரி 31 அன்று அடையப்பட்டதாகவும், இது அந்நாளில் மட்டும் 35.6 மில்லியன் திர்ஹம் ஆக இருந்தததாகக் கூறப்படுகிறது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை விட டியூட்டி ஃப்ரீ விற்பனை வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான இறுதிப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், துபாய் டியூட்டி ஃப்ரீயின் மதிப்பீட்டின்படி, பயணிகளின் வளர்ச்சியை விட விற்பனை வளர்ச்சி சுமார் 13.5 சதவீதம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தச் செயல்திறன் குறித்து துபாய் டியூட்டி ஃப்ரீயின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் சிதாம்பி கூறுகையில், இந்த வலுவான தொடக்கம் விற்பனையில் சாதனை படைத்த 2025 ஆம் ஆண்டைத் தொடர்ந்து வந்துள்ளது என்றும், அதிகரித்த பயணிகளின் செலவு, முக்கிய தயாரிப்பு வகைகளில் வலுவான தேவை மற்றும் அனைத்து முக்கிய பிராந்தியங்களிலும் உறுதியான செயல்திறன் ஆகியவற்றால் இந்த சாதனை படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய் டியூட்டி ஃப்ரீயின் பல தயாரிப்பு வகைகள் ஜனவரி மாதத்தில் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கம் இந்த விற்பனையில் முன்னிலை வகித்து, 45.74 சதவீத அதிகரிப்புடன் 104 மில்லியன் திர்ஹம் வருவாயை ஈட்டியுள்ளது. அதேபோல், ஃபேஷன் விற்பனை 36.68 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட 82 மில்லியன் திர்ஹம் ஆகவும், எலக்ட்ரானிக்ஸ் 36.61 சதவீதம் உயர்ந்து 65 மில்லியன் திர்ஹம் ஆகவும் இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

இவற்றுடன் விலையுயர்ந்த நகைகள் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து, 69.51 சதவீதம் உயர்ந்து 28 மில்லியன் திர்ஹம் ஆக இருந்தது. இதேபோல் மற்ற வகைகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. வாசனை திரவியங்கள் 13.61 சதவீதம் உயர்ந்து 147 மில்லியன் திர்ஹம் ஆகவும், இனிப்பு வகைகள் 15.35 சதவீதம் உயர்ந்து 80.69 மில்லியன் திர்ஹம் ஆகவும், அழகுசாதனப் பொருட்கள் 7.67 சதவீதம் வளர்ந்து 40 மில்லியன் திர்ஹம் ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, கடிகாரங்களின் விற்பனை 30.94 சதவீதம் அதிகரித்து 33 மில்லியன் திர்ஹம்களாகவும், அதே சமயம் சுவைமிகு உணவுப் பொருட்களின் விற்பனை 8.36 சதவீதம் அதிகரித்து 27.77 மில்லியன் திர்ஹம்களாகவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, துபாய் சாக்லேட் ஒரு சிறப்பான செயல்திறனை பதிவு செய்துள்ளது, இது ஜனவரி 2026-ல் சுமார் 83 டன்கள் விற்பனை செய்யப்பட்டு, 36 மில்லியன் திர்ஹம்களை எட்டியுள்ளது. இது ஜனவரி 2025-ல் இருந்த 24 மில்லியன் திர்ஹம்கள் மற்றும் 42 டன்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

பிராந்திய வாரியாகப் பார்க்கையில், ஐரோப்பா மற்றும் ரஷ்யா முறையே 35 சதவீதம் மற்றும் 36 சதவீதம் அதிகரிப்புடன் விற்பனை வளர்ச்சியில் முன்னிலை வகித்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா 29 சதவீதத்துடனும், அமெரிக்கா 22.5 சதவீதத்துடனும், இந்திய துணைக்கண்டம் 11 சதவீதத்துடனும், கிழக்கு நாடுகள் 10.5 சதவீதத்துடனும், மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் 5.3 சதவீதத்துடனும் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளன..

ஒட்டுமொத்தத்தில், துபாய் டியூட்டி ஃப்ரீ நிறுவனம் வலுவான செயல்திறன் மற்றும் பயணிகளின் அதிக செலவினம் ஆகியவற்றுடன் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள சாதனை அளவிலான ஜனவரி மாத விற்பனை, 2026 ஆம் ஆண்டு முழுவதும் நேர்மறையான விற்பனை வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக துபாய் டியூட்டி ஃப்ரீ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel