ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தீவிர தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் நேற்று காலை முதல் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தனது எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளங்களும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு முழுவதும் நடந்த தாக்குதல் சம்பவங்கள் பற்றி அதிகாரிகளால் உறுதிப்படுத்த விபரங்களை இங்கே பார்க்கலாம்.
வான் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்
- 137 ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டது.
- 132 ஏவுகணைகள் அழிக்கப்பட்டது.
- 5 ஏவுகணைகள் கடலில் விழுந்தது.
- 209 ஈரானிய ட்ரோன்கள் கண்டறியப்பட்டது.
- 195 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டது.
- 14 ட்ரோன்கள் நிலத்திலும் கடலிலும் விழுந்ததால் சிறிய சேதம் ஏற்பட்டது.
- இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் தனித்தனி பகுதிகளில் விழுந்ததால் சிறிய அளவு பொருள் சேதமும் ஏற்பட்டது.
துபாய்: குடியிருப்பு பகுதியில் இரண்டு பேர் காயம்
- வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் துபாயில் இரண்டு வீடுகளின் முற்றங்களில் விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
- துபாய் முழுவதும் நேற்று இரவு கேட்ட சப்தங்கள் வெற்றிகரமான இடைமறிப்பு நடவடிக்கைகளின் விளைவாகும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
அபுதாபி விமான நிலையங்கள்: ஒருவர் உயிரிழந்தார், ஏழு பேர் காயமடைந்தனர்
- அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை இடைமறித்ததில் கீழே விழுந்த உடைந்த பாகங்கள் ஒரு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தன.
- இறந்தவர் ஒரு ஆசிய நாட்டவர் ஆவார். மேலும் இதில் ஏழு பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றனர். மேலும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தினர்.
துபாய் விமான நிலையங்கள்: நான்கு பேர் காயம்
- துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு டெர்மினலில் ட்ரோன் தாக்குதலால் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், அது விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
- அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு இதில் காயமடைந்த நான்கு ஊழியர்கள் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
- பெரும்பாலான முனையங்கள் ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகளை அகற்றிவிட்டன.
புர்ஜ் அல் அரபு ஹோட்டல்: தீ கட்டுப்படுத்தப்பட்டது
- உலகப் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரபு ஹோட்டலின் வெளிப்புற முகப்பில் ஏற்பட்ட சிறிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
- இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்ததன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெபல் அலி துறைமுகம்: ஒரு பெர்த்தில் தீ விபத்து
- ஜெபல் அலி பகுதியில் இடைமறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்கள் கீழே விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 7, 2021 அன்று வெளியிடப்பட்ட பழைய துறைமுக தீ விபத்து வீடியோ தவறான தகவல்களை பரப்பக்கூடும் என்பதால், அதை பொதுமக்களிடம் பரப்ப வேண்டாம் என்று அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுத்தனர்.
GCAA: பொழுதுபோக்கு விமானத்திற்கான அனுமதி இடைநிறுத்தம்
- பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கிளைடர்கள், ட்ரோன்கள் மற்றும் பொழுதுபோக்கு விமானங்களுக்கான அனைத்து விமான அனுமதிகளையும் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்தது.
- இந்த இடைநிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இந்த காலகட்டத்தில் அத்தகைய விமானங்களின் செயல்பாடுகள், ஏவுதல் அல்லது பறத்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் GCAA அறிவித்தது.
பயணிகளின் செலவை ஏற்ற GCAA:
- ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமான போக்குவரத்து மாற்றங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 20,200 பயணிகளுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கான விடுதி மற்றும் தங்குமிட செலவுகளை அரசு ஏற்பதாக அமீரகம் அறிவித்தது.
- விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் இடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடப்பதாக GCAA தெரிவித்தது.