ஐக்கிய அரபு அமீரகம் நேற்று முதல் ஈரானின் தாக்குதலுக்கு ஆளாகி வந்த நிலையில், தற்போது பதட்டமான சூழல் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதாகவும், பொதுமக்கள் தங்களின் அன்றாட வேலைகளை கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடன் தொடரலாம் எனவும் NCEMA அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமீரகத்தில் வசிக்கும் பொதுமக்கள் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கை செய்தி தங்கள் மொபைல் ஃபோனில் பெற்றனர். அதில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் கதவு, ஜன்னல்கள் அருகில் இருப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் நேற்று முதல் ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமீரகம் அதனை வெற்றிகரமாக இடைமறித்து வருகின்றது. இருந்த போதிலும் ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் ஒரு சில நேரங்களில் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளன.
அமீரகம் முழுவதும் கேட்கப்பட்ட ஒலிகள் வெற்றிகரமான இடைமறிப்பு நடவடிக்கைகளின் விளைவாகும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். மேலும் வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் இன்று காலை அபுதாபியில் இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் துண்டுகள் எதிஹாட் டவர்ஸை தாக்கியதில் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சிறிய அளவிலான பொருள் சேதமும் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.
மேலும், துபாயில் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரோன்களின் உடைந்த துண்டுகள் இரண்டு வீடுகளின் மீது விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.