மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து துபாய் செல்லும் விமானங்கள் நேற்று (திங்கள்கிழமை) இந்தியாவில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இந்தியாவிற்கு மீண்டும் திரும்பியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியா திரும்பிய இந்த விமானங்களுக்கான சேவையானது பின்னர் மறு அட்டவணைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில் “டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து புறப்பட்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை துபாய்க்குச் செல்லும் விமானங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களின்படி, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தங்கள் இடங்களுக்குத் திரும்பியதை எமிரேட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் இந்த விமானங்களை முடிந்தவரை மறு அட்டவணைப்படுத்தும், மேலும் பயணிகள் மறு அட்டவணைப்படுத்தப்படும் வரை ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள்”என்று தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் நடந்து வரும் இராணுவ மோதல் காரணமாக, திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது வான்வெளியை மூடியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சனிக்கிழமை முதல் நாட்டில் சிக்கித் தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன. எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளைதுபாய் மற்றும் ஏர் அரேபியா ஆகிய அனைத்து உள்ளூர் விமான நிறுவனங்களும் சில ஆசிய, ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்குகின்றன.
கடந்த சனிக்கிழமை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ மோதல் வெடித்ததிலிருந்து, வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட 13,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.