வான்வெளி மூடல்கள் மற்றும் விமான இடைநிறுத்தங்களின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடியாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நிவர்த்தி அளிக்கு விதமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் விமான சேவை பாதிப்பால் அமீரகத்தை விட்டு வெளியேறாத சுற்றுலா பயணிகள் தாமதமாக புறப்படுவதற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதால் அல்லது மறு அட்டவணைப்படுத்தப்பட்டதால் விமானத்தில் பயணிக்க முடியாதவர்களுக்கு இந்த விலக்கு பொருந்தும் என்று அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிப்ரவரி 28, 2026 முதல் ஏற்படும் அபராதங்களை இந்த விலக்கு உள்ளடக்கியது என கூறப்பட்டுள்ளது., மேலும் இது கீழ்க்கண்ட பிரிவினருக்கு பொருந்தும்:
- சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்கள்
- விசிட் விசாக்களை வைத்திருக்கும் பார்வையாளர்கள்
- எக்ஸிட் பெர்மிட் உள்ள நபர்கள்
- புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் தங்கள் ரெசிடென்சி பெர்மிட்டை ரத்து செய்த குடியிருப்பாளர்கள்.
அமீரக விமான நிலையங்கள் மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் உள்ள சிறப்பு குழுக்கள் விமானங்கள் தாமதமான அல்லது மறு அட்டவணைப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு தொடர்ந்து உதவுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவசர மற்றும் வணிக தொடர்ச்சித் திட்டங்களின் கீழ் குழுக்கள் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
எனவே பாதிக்கப்பட்ட பயணிகளை அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் புதுப்பிப்புகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர், மேலும் பயணிகள் இடையூறுகளைத் தவிர்க்க உதவும் ஆதரவு நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதை அடுத்து இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட விமானங்கள் குறைந்தபட்சம் மார்ச் 7 சனிக்கிழமை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் சிக்கித் தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்ப பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் (GCAA) ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதால், மணிக்கு 48 விமானங்கள் வரை இயக்கக்கூடிய வகையில், GCC நாடுகளுடன் பாதுகாப்பான விமானப் பாதைகளையும் அதிகாரிகள் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.