மார்ச் 9 ஆம் தேதியான இன்று இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இணைந்து, 32 கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்கவிருப்பதாக நேற்று சனிக்கிழமை விமானக் குழு சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிறப்பு விமானங்கள் புறப்படும் விமான நிலையம் மற்றும் புறப்படும் நேரங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயக்கப்படும் என்றும், இந்திய மற்றும் உள்ளூர் விமான அதிகாரிகளின் தேவையான அனுமதிகளுடன் இந்த சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, மும்பையிலிருந்து மூன்று விமான சேவை மற்றும் டெல்லியிலிருந்து இரண்டு விமான சேவை உட்பட துபாய் மற்றும் இந்தியா இடையே 10 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கும். கூடுதலாக, துபாய் மற்றும் மும்பை மற்றும் பெங்களூரு இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலா ஒரு விமான சேவை வழங்கும்.
இது தவிர, அபுதாபியிலிருந்து பெங்களூரு மற்றும் மும்பைக்கும், ஷார்ஜாவிலிருந்து பெங்களூரு மற்றும் மும்பைக்கும், ராஸ் அல் கைமாவிலிருந்து பெங்களூரு, டெல்லி, கொச்சி மற்றும் மும்பைக்கும் இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரண்டு விமான பயணங்களை இயக்கும். ஏர் இந்தியா அறிவித்துள்ள இந்த விமான சேவைகள் இரு வழிப் பயணம் (round trip) என்பது குறிப்பிடத்தக்கது.
பயண ரத்துகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான கூடுதல் விமானங்கள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ரத்து செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த விமான நிலையத்திலிருந்தும் இந்தியாவின் எந்த இடத்திற்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் டிக்கெட்டுகளை மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதித்துள்ளது.
அமீரகத்திலிருந்து குறிப்பிட்ட விமான போக்குவரத்து செயல்பாடுகள் இருந்தபோதிலும், பஹ்ரைன், தம்மாம், தோஹா, குவைத் மற்றும் ரியாத் உள்ளிட்ட பல விமான நிலையங்களுக்கு, மார்ச் 13 வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த வழித்தடங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் எதிர்கால தேதிக்கு மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது பயணிகள் தங்களின் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜித்தா மற்றும் மஸ்கட் செல்வதற்கான வான்வெளி திறந்திருப்பதால், இந்த இரு விமான நிலையத்திற்கும் திட்டமிடப்பட்ட விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, மார்ச் 9 ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து இயக்கப்படும் சேவைகள் உட்பட ஜித்தா மற்றும் மஸ்கட்டிலிருந்து 10 விமானங்களை இயக்கும். அதே நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களிலிருந்து ஜித்தாவிற்கு விமானங்களை இயக்கும்.
அதே போன்று மஸ்கட்டிற்கு 14 விமானங்களை இயக்கவிருப்பதாக இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இதில் டெல்லி, மும்பை, கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒரு விமான சேவையும், மற்றும் கொச்சியிலிருந்து இரண்டு விமான சேவையும் அடங்கும்.
எனவே, முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் சமீபத்திய விமான நிலையை புதுப்பிப்பை சரிபார்த்து, பயண அறிவிப்புகளைப் பெற அவர்களின் தொடர்பு விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.