இந்திய செய்திகள்

தாயகம் திரும்புபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!! பயணம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத் திட்டத்தில் (Vande Bharat Mission)’ கடைபிடிக்கப்படும் நிலையான இயக்க நடைமுறைகள் (standard operating procedure -SOP) பற்றிய முழு விபரங்களை இந்திய உள்நாட்டு விவகார அமைச்சகம் (Ministry of Home Affairs – MHA) இன்று (செவ்வாய்க்கிழமை) மே 5 அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவிற்கு பயணிக்கும் அனைவரும் தங்களின் சொந்த துணிவில் (own risk) பயணிக்கிறோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி இந்தியா செல்ல கூடிய பயணிகள் அனைவருக்கும், இந்திய அரசால் கடைபிடிக்கப்படும் நெறிமுறைகள் பற்றிய தொகுப்பை உங்களுக்காக நாங்கள் இங்கு பிரத்யேகமாக கொடுத்துள்ளோம்.

 • பயணிகள் அனைவரும் இந்தியாவுக்கு வந்தவுடன் கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்வேன் என்று எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.
 • இந்திய விமான நிலையங்களில் பயணிகள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை (thermal screening) செய்யப்படும்.
 • அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல் சாதனங்களில் ஆரோக்யா சேது அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்கப்படுவார்கள்.
 • மருத்துவ பரிசோதனையின் போது (screening) கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் சுகாதார நெறிமுறையின்படி கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
 • கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு (quarantine facilities) அழைத்து செல்லப்படுவர். இந்த மையங்கள் பயணிகளின் சொந்த மாவட்ட தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
 • அவ்வாறு செல்லும் பயணிகள் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுவார்கள். 14 நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தங்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சுகாதார நெறிமுறைப்படி, மேலும் அடுத்த 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நலம் குறித்து சுய கண்காணிப்பை (self-monitoring) மேற்கொள்ள வேண்டும்.
 • சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் (Ministry of Civil Aviation -MoCA) குறிப்பிடப்பட்டுள்ளபடி சொந்த நாடுகளுக்கு செல்வதற்கான பயணச் செலவு பயணிகளால் ஏற்கப்படும்.
 • விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு, அனைத்து பயணிகளும் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்யும். கொரோனா அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே விமானத்திலோ அல்லது கப்பலிலோ செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
 • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள் இந்திய தூதரகங்கள் வெளியிட்டுள்ள வலைத்தளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அனைத்து பயணிகளின் பதிவு விபரங்களும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்களுடன் முன்கூட்டியே பகிரப்படும்.
 • பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், விசா காலாவதியானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட மருத்துவ அவசரநிலை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மற்றும் தங்களின் குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்தால் துன்பத்தில் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
 • வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட விவரங்களுடன் முன்கூட்டியே ஒரு சுய அறிவிப்பு படிவம் (self-declaration form) ஒன்றை நிரப்ப வேண்டும். இந்தியா சென்றடைந்தவுடன் விமான நிலையத்திலோ அல்லது துறைமுகத்திலோ இருக்க கூடிய இமிகிரேஷன் அதிகாரிகளிடம் அந்த படிவத்தின் நகலை ஒப்படைக்க வேண்டும்.
 • விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
 • விமானம் மற்றும் கப்பல்களில் பயனிப்பவர்கள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் இராணுவ விவகாரங்கள் துறையால் (Department of Military Affairs -DMA) கூறப்பட்டுள்ள சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!