குவைத்திலிருந்து பொதுமன்னிப்பின் மூலம் இலங்கை திரும்பும் பணி இன்று முதல் ஆரம்பம்..!!

குவைத் நாட்டில் சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் சமீப காலமாக ஒவ்வொரு நாட்டினராக பொது மன்னிப்பை வழங்கி வருகின்றது. இந்நிலையில், இலங்கையர்களுக்காக குவைத் அரசாங்கம் அறிவித்த பொது மன்னிப்பைப் பெறும் இலங்கையர்கள், மீண்டும் இலங்கைக்கு இன்று நாடு திரும்புகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் நாசர் அல் முஹம்மத் அல் சபாஹ்வுடன் தொலைபேசி வாயிலாக நேற்று (மே 18) கலந்துரையாடிய இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஏறத்தாழ 460 பேரை உள்ளடக்கிய இலங்கையர்களை முதலாம் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) குவைத் ஏர்வேஸின் இரண்டு விமானங்களில் இலங்கையை வந்தடைவர் என கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் குவைத் நாட்டின் இமிகிரேஷன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் கூறியதாவது,”குவைத்திலிருந்தது பொது மன்னிப்பு மூலமாக இலங்கைக்கு செல்ல தகுதியுடையவர்களை சரிபார்த்து, அதற்கு தேவையான அவசர பயண ஆவணங்களை குவைத் நாட்டிற்கான இலங்கை தூதரகம் வழங்கும்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த பொதுமன்னிப்பின் மூலமாக நாடு திரும்புபவர்கள் எந்த சட்ட சிக்கலுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும், முறையான வேலை அனுமதி பெற்று மீண்டும் குவைத் நாட்டிற்கு திரும்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போன்று வரக்கூடிய காலங்களில், பொதுமன்னிப்பை பெறும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து செல்லப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உறுதியளித்துள்ளார். இருப்பினும், இலங்கைக்கு திருப்பி வரக்கூடியவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை பொறுத்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக இரண்டு அரசாங்கங்களும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். தற்போது குவைத்தில் பணிபுரியும் 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஆதரவுகளுக்காக அமைச்சர் குவைத் அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மேலும், குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சமூகத்தினர் மற்றும் குவைத்தை தளமாகக் கொண்ட இதர சமூக குழுக்களுடன் இணைந்து, உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து உலர் உணவுப்பொருட்களை வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.