VBM4: GCC, மலேஷியா, சிங்கப்பூருக்கு 120 விமானங்கள் கூடுதலாக சேர்ப்பு.. ஐந்தாம் கட்டம் இருக்க வாய்ப்பில்லை.. MEA செய்தி தொடர்பாளர் தகவல்..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூலை 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தற்போது கூடுதலாக 120 விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத்தின் நான்காம் கட்ட நடவடிக்கை குறித்த ஒரு மாநாட்டில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், கூடுதலாக சேர்க்கப்பட்ட விமானங்கள் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பா, கிர்கிஸ்தான், மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்துவர இயக்கப்படும் என கூறியுள்ளார்.
“கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள 120 விமானங்களின் மூலம், ஜூலை 15 முதல் 31 வரை மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் சர்வதேச விமானங்களின் மொத்த எண்ணிக்கையானது 751 ஆக உயரந்துள்ளதாகவும், இந்த விமானங்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய 34 விமான நிலையங்களுக்கு நேரடியாக இயக்கப்படுகிறது” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது வரையிலும் மொத்தம் 687,467 இந்திய குடிமக்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக MEA அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத்தின் ஐந்தாம் கட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்திருந்த இந்திய குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் நாடு திரும்பிவிடுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் ஐந்தாம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.