இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்து தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு..!! DGCA சுற்றறிக்கை வெளியீடு..!!

இந்தியாவில் அமலில் இருக்கும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துத் தடையானது ஜூலை 15 வரை நீடிக்கும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடையானது தற்பொழுது ஜூலை 31 ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் (DGCA) இன்று (ஜூலை 3) புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கெனவே கூறியது போன்று சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற நாடுகளுக்கு இடையேயான சரக்கு விமானங்களுக்கும், வந்தே பாரத்தின் சிறப்பு விமானங்களுக்கும், இந்திய அரசின் அனுமதியுடன் செயல்படும் தனி விமானங்களும் தடையில்லை என்றும் அவை தொடர்ந்து இயங்கி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்தாலும், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல வேண்டியுள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்ல விரும்புபவர்கள் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.