வந்தே பாரத் திட்டத்தில் இதுவரையிலும் தாயகம் திரும்பியவர்கள் 2 லட்சம் பேர்..!! இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றவர்கள் 85000 பேர்..!! அறிக்கை வெளியிட்ட இந்திய அரசு..!!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் 200,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்களின் மூலமாக, இந்தியாவில் சிக்கி தவிக்கும் பிற நாடுகளை சேர்ந்த பல நபர்களும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 7 ம் தேதியில் இருந்து ஜூலை 13 வரை மேற்கொள்ளப்பட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் மூலம், ஏர் இந்தியா குழுமத்தால் (ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) இயக்கப்பட்ட சுமார் 1,103 விமானங்கள் வாயிலாக வெளிநாட்டிலிருந்து 208,724 இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் இந்தியா விமான நிறுவனங்களை சேர்ந்த 639 விமானங்கள் மூலம் 1,26,078 பயணிகளும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 464 விமானங்கள் மூலம் 82,646 பயணிகளும் தாய்நாட்டிற்கு திருப்பி அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, இந்தியாவில் சிக்கித் தவித்த பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களில் சுமார் 85,289 நபர்களும் இந்தியாவிலிருந்து சென்ற விமானங்களின் மூலம் தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் இந்தியா விமானங்கள் 78,037 பயணிகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 7,252 பயணிகளையும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றிச் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் வாயிலாக இதுவரையிலும் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 53 நாடுகளில் இருக்கும் 71 நகரங்களில் இருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் இருக்கும் 17 மாநிலங்களில் இருந்து வெளிநாட்டவர்கள் மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுவே உலகின் எந்தவொரு சிவில் விமான நிறுவனமும் இதுவரையிலும் மேற்கொள்ளாத மிகப்பெரிய திருப்பி அனுப்பும் நடவடிக்கையாகும். இதற்கு முன்னதாக 1990-91ல், குவைத்தில் சிக்கி தவித்த 1,11,711 இந்தியர்கள் திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் வாயிலாக 488 விமானங்களின் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.