இந்திய செய்திகள்

மே 6 முதல் செப்டம்பர் 15 வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்திற்கும் மேல்..!!

கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா எனும் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் மற்ற நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து இந்திய நாட்டவர்கள் பலரும் தாய்நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வந்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவருவதற்காக “வந்தே பாரத்” எனும் நடவடிக்கை இந்திய அரசால் தொடங்கப்பட்டு மே மாதம் 6 ஆம் தேதி முதல் இன்று வரையிலும் “திருப்பி அனுப்பும் நடவடிக்கை” வான்வழி மார்க்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவர இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களே பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.

கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் எனும் திருப்பி அனுப்பும் நடவடிக்கை மற்றும் பிற நாடுகளுடனான வான்வழி போக்குவரத்து தொடர்பான சிறப்பு ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரையிலும் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 14,47481 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 4,51,527 இந்தியர்கள் இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அதே போன்று 8,46,000 இந்தியர்கள் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு சொந்தமான விமானங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விமான நடவடிக்கையின் கீழ் மே 6 ம் தேதி முதல் செப்டம்பர் 15 ம் தேதி வரையிலான காலகட்டங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய விமானங்கள் மூலமாக மட்டுமே திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்த வேளையில், குறிப்பிட்ட சில நாடுகளுடன் மட்டும் ஏர் பபுள் எனும் ஒப்பந்தம் போடப்பட்டு அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாட்டு விமான நிறுவனங்களின் மூலமாகவும் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை வாயிலாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவது மட்டுமில்லாமல், இந்தியாவில் சிக்கித்தவித்த பிற நாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பி செல்லவும் அனுமதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!