ADVERTISEMENT

அமீரகத்தில் உருவாக்கப்படவிருக்கும் “MBZ-sat” எனும் புதிய செயற்கைகோள்..!! துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பெருமிதம்..!!

Published: 28 Oct 2020, 5:36 PM |
Updated: 28 Oct 2020, 5:36 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது மீண்டும் ஒரு புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட இருப்பதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்பிமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். புதியதாக உருவாக்கப்படவிருக்கும் இந்த செயற்கைக்கோளுக்கு MBZ-Sat என்று பெயரிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் பெயரின் சுருக்கமான எழுத்துக்களை கொண்டு இந்த செயற்கைக்கோளுக்கு MBZ-Sat என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைக்கோள் சமீபத்திய தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்படும் என்றும் இதனை உருவாக்கும் திட்டத்தின் பின்னணியில் பணிபுரியவிருக்கும் குழுவினர்கள் 100 சதவீதம் அமீரக குடிமக்களாக இருப்பர் என்றும் தனது ட்விட்டரில் ஷேக் முகமது அவர்கள் கூறியுள்ளார். மேலும் இந்த செயற்கைக்கோள் பொதுமக்கள் மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் மாண்பிமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது “புதிய செயற்கைகோளின் பெயர் MBZ-sat. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளுக்கு Khalifa-sat என்று பெயரிடப்பட்டது. இதற்கு எனது சகோதரர் முகமது பின் சயீத்தின் பெயரிடப்படும். இறைவன் அவரைப் பாதுகாக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குள்ளேயே 100 சதவீதம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் Khalifa-sat ஆகும். உலகின் மிகவும் மேம்பட்ட ரிமோட் சென்சிங் கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் ஒன்றான இது, பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏவப்பட்டது. பூமியின் உயர்தர மற்றும் விரிவான படங்களை கைப்பற்றி துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திற்கு அனுப்பும் ஐந்தாண்டு பணியை இந்த செயற்கைகோள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி சாதனைகள்…

செப்டம்பர் 25, 2019 அன்று அமீரகம் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது. அமீரக விண்வெளி வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி ரஷ்ய விண்கலமான சோயுஸ் எம்.எஸ் -15 விமானத்தில் எட்டு நாள் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றிருந்தார்.

மேலும், 2021 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கும், 2117 க்குள் அங்கு முதல் குடியேற்றத்தை உருவாக்குவதற்கும் நாட்டின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் தனது தேசிய விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் விதமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹோப் விண்கலத்தை அமீரக அரசு விண்ணில் ஏவியது. அன்று முதல் விண்வெளியில் பயணிக்கும் ஹோப் விண்கலம் சுமார் 200 மில்லியன் கிலோமீட்டருக்கு மேல் பயணித்து செவ்வாய் கிரகத்தின் பயண தூரத்தில் பாதியை நெருங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.