ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்துத் துறையில் பல்வேறு நவீன மாற்றங்களைத் தொடர்ந்து கொண்டு வரும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்பொழுது டாக்ஸி சேவையில் புதியதொரு மாற்றத்தை நிகழ்த்தவுள்ளது. துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) ஹைபிரிட் (மின்சாரம் மற்றும் எரிபொருள்) வண்டிகளைப் பயன்படுத்தும் ‘லண்டன் டாக்ஸி’ முறை சேவையைத் (London Style Taxi Service) தொடங்க உள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டாக்ஸி கருப்பு நிறத்தில் பிரிட்டிஷ் தலைநகரில் இயங்கும் லண்டன் கேப்பைப் (London Cab) பிரதிபலிக்கிறது. DTC-யானது வரும் பிப்ரவரியில் இந்த வாகனத்தை சோதனை செய்யத் தொடங்கும் என்றும், மேலும் இந்த சேவை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் செயல்திறன்களையும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களையும் குறித்து ஆய்வு செய்ய சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மற்றும் தலைவரான மட்டார் முகமது அல் தயர் அவர்கள் DTC-யினைப் பார்வையிட செல்லும்பொழுது லண்டன் டாக்ஸி முறை சேவைக்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த புதிய டாக்ஸி சேவையானது RTA டாக்ஸி சேவைகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டங்களின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என கூறியுள்ளார்.
லண்டன் டாக்ஸியின் உட்புற அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த டக்ஸியானது ஒரு தனித்துவமான மற்றும் வசதியான உட்புறத்தைக் கொண்டுள்ளது. இந்த டாக்ஸியில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு விசாலமான இடத்தையும் ஆறு இருக்கைகளையும் தனி கேபினில் வழங்குகிறது.
இந்த வடிவமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டாக்ஸியில் வைஃபை நெட்வொர்க்குடன் கூடுதலாக செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் (satellite-based navigation), வாய்ஸ் கமன்ட் (voice command), முன்னோக்கி-மோதல் தொடர்பான எச்சரிக்கை (forward-collision warning), பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் (blind-spot monitoring) மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம் (lane departure warning systems) போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
The trialling of the London Taxi version service will start this February and the service will be available at the Dubai International Airport. The new taxi is characterised by a unique and roomy interior that offers riders a wide space and six seats in a separate cabin.@DTCUAE pic.twitter.com/J7DW8Nm0DZ
— RTA (@rta_dubai) January 16, 2021
மேலும், வெவ்வேறு காலநிலை நிலைமைகளின் கீழ் வாகனத்தை சிறப்பாக கட்டுப்படுத்த இரட்டை என்ஜின் (Dual Engine) இதில் உள்ளது. இது வேகமான பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது மற்றும் வேகமான சார்ஜிங் அம்சத்தைப் பயன்படுத்தி 30 நிமிடங்களில் பேட்டரியினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் வழக்கமான சார்ஜிங் அம்சத்தைப் பயன்படுத்தி பேட்டரியினை ரீசார்ஜ் செய்ய மூன்று மணிநேரம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

