கொரோனாவிற்கான தடுப்பூசியினை தற்பொழுது கர்ப்பிணிப் பெண்களுக்கும் போடத் தொடங்கியுள்ளதாக துபாய் சுகாதார ஆணையம் (DHA) அறிவித்துள்ளது.
துபாய் முழுவதும் உள்ள அனைத்து DHA தடுப்பூசி மையங்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசியினை வழங்கத் தொடங்கியுள்ளன.
தடுப்பூசி பெற DHA இன் ஸ்மார்ட் அப்ளிகேஷன் அல்லது 800342 இல் DHA WhatsApp மூலம் அப்பாய்மெண்ட் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஒரு மூலோபாய திட்டத்தின் படி, துபாயில் தடுப்பூசி பெற தகுதியான அனைத்து சமூக பிரிவுகளின் எண்ணிக்கையை ஆணையம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான லதிபா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முனா தஹ்லக் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பிரச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்களைச் சேர்ப்பது நோய்த்தொற்றின் அபாயங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் மற்றும் சமூகத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் COVID-19 ஐ எதிர்ப்பதில் தடுப்பூசி திட்டம் ஒரு முக்கிய படியாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
துபாயில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத் தேவையான ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் தேவையான அளவை DHA ஒதுக்கியுள்ளது. தடுப்பூசி எடுப்பதற்கு முன், கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக உடல்நிலை பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் கர்ப்பத்தை கண்காணித்து வரும் சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் டாக்டர் தஹ்லக் கூறியுள்ளார்.
தடுப்பூசி இரண்டு டோஸ்களில் வழங்கப்படும் மற்றும், கர்ப்பத்தின் முதல் 13 வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.