அமீரக செய்திகள்

UAE: பொது இடங்களுக்கு செல்ல கிரீன் பாஸ் கட்டாயம்..!! விதிமுறையைக் கடைபிடிக்க தயாராகும் அபுதாபி மால்கள்..!!

அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகள் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் கிரீன் பாஸ் தேவை குறித்து தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றன. மேலும் கிரீன் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே நுழைவதை உறுதி செய்வதற்காக நுழைவு பகுதிகளில் அதிக பாதுகாப்புக் காவலர்களை நிறுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள அதிகாரிகள் கடந்த வாரம், பெரும்பாலான பொது இடங்களுக்கு நுழைவதற்கு குடியிருப்பாளர்கள் தங்கள் அல்ஹோஸ்ன் பயன்பாட்டில் கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தனர். இந்த விதி ஜூன் 15 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி பொது இடங்களான ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய கடைகள், ஜிம்கள், ஹோட்டல்கள், பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள், தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றிற்கு செல்ல கிரீன் பாஸ் கட்டாயமாகும்.

புதிய கிரீன் பாஸ் தேவை குறித்த தகவல்களை நுழைவாயில்களில் காண்பிப்பதாகவும், இந்த விதிமுறையினால் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக கிரீன் பாஸை விரைவாகவும் திறமையாகவும் சரிபார்க்க பாதுகாப்பு குழுக்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் மால் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி நிலை மற்றும் PCR சோதனை முடிவுகளின் அடிப்படையில் உங்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் பிரதிபலிக்கும் மூன்று வண்ண குறியீடுகளில் கிரீன் பாஸ் ஒன்றாகும். கிரீன், PCR சோதனை முடிவு எதிர்மறை என்பதைக் குறிக்கின்றது. மற்ற இரண்டு நிறங்களான க்ரே PCR செல்லுபடி முடிந்ததற்காகவும் மற்றும் சிவப்பு PCR சோதனை முடிவு நேர்மறையானது என்பதையும் குறிக்கும்.

இது குறித்து முஷ்ரிஃப் மால் மற்றும் தி மார்க்கெட்டின் பொது மேலாளர் அரவிந்த் ரவி கூறியதாவது, “கிரீன் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாலுக்குள் நுழைவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு காவலர்களுக்கு அல்ஹோஸ்ன் பயன்பாட்டை சரிபார்க்கும்போது  மாலுக்கு வரும் நபர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்”.

“மக்கள் நுழைவாயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் கூட்டமாக சேர்வதைத் தடுக்கும் விதமாகவும், ஒரு பாதுகாப்பு காவலர் ஒவ்வொரு நபருக்கும் அல்ஹோஸன் பயன்பாட்டை சரிபார்க்க ஐந்து முதல் 10 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதை உறுதி செய்வோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும் ஜூன் 14 திங்கள் முதல், மால் நிர்வாகம் தங்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்குள் சுவரொட்டிகள் மூலம் புதிய விதிமுறைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மெரினா மாலின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த மெல்வின் மேத்யூ, பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்படி செய்ய மாலின் பாதுகாப்பு செயல்பாட்டுத் துறை, புதிய விதிமுறைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக நுழைவு பகுதிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லூலு குழுமத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்பு இயக்குனர் வி. நந்தகுமார் கூறுகையில், “கிரீன் பாஸை விரைவாகவும் திறமையாகவும் சரிபார்க்க எங்கள் பாதுகாப்பு குழுவுக்கு பயிற்சி அளித்துள்ளோம், இதனால் தேவையற்ற தாமதங்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கலாம்”.

“அத்துடன் எங்களின் நுகர்வோர்களுக்காக எங்கள் மால் வளாகத்தில் இலவச PCR சோதனைகளை எளிதாக்குவதற்காக சில சுகாதார நிறுவனங்களுடன் இணைவதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “லுலு குழு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகவும் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது, அனைவரின் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவோம். ஜூன் 15 முதல், அபுதாபியில் உள்ள எங்கள் மால்கள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளில் கிரீன் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உள்நுழைய அனுமதி என்ற முயற்சியை செயல்படுத்தும். அதற்காக வாதிக்கையாளர்கள் நுழைவு பகுதிகளில் சரிபார்ப்புக்காக தங்கள் அல்ஹோஸ்ன் பயன்பாட்டைக் காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கலீதியா மாலின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த மயங்க் பால், ஜூன் 15 ஆம் தேதி காலை முதல் கிரீன் பாஸ் தேவையை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த மால் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!