ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ருக்குப் பிறகு கொரோனா பாதிப்பானது அதிகரித்திருப்பதாக அமீரகத்தின் சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில், பெரிய அளவில் கூட்டமாக ஒன்று கூடுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கத் தவறிய குடியிருப்பாளர்களுமே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் கோடை விடுமுறைகள் தொடங்கப்படுவதோடு, ஜூலை மாதம் ஈத் அல் அத்ஹா விடுமுறையும் வரவிருப்பதால், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்களுக்கு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் முக கவசங்களை அணிவது மற்றும் பாதுகாப்பான சமூக தூரத்தை பராமரிப்பது ஆகியவை அடங்கும்.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்களும் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் 1,500 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகிய நிலையில், அதற்குப் பின்னர் இருந்து தற்பொழுது வரை 2,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் தினமும் பதிவாகின்றன.
இந்த வருடத்திலேயே மே மாதத்தில் தான் குறைவான கொரோனா தொற்று அமீரகத்தில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.