ஐக்கிய அரபு அமீரகத்தில் பூட்டிய பேருந்தில் பல மணி நேரமாக மாட்டிக்கொண்ட 4 வயது சிறுவன் இறுதியில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ள நிகழ்வானது பலரையும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அஜ்மானில் கொளுத்தி எடுக்கும் இந்த கோடை வெயிலின் போது நான்கு மணி நேரமாக பேருந்தில் தனியாக விடப்பட்டதில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அரபு நாட்டைச் சேர்ந்த சிறுவன் திங்களன்று குழந்தைகளுக்கான மையத்தைச் சேர்ந்த பேருந்திற்குள் இருந்ததை பேருந்தின் மேற்பார்வையாளர் மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், மோசமான நிலையில் இருந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அஜ்மான் காவல்துறையின் போலீஸ் ஆபரேஷன்ஸ் இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா சைஃப் அல் மத்ரூஷி தெரிவித்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது.
“மையத்தின் மேற்பார்வையாளர் குழந்தைகளை மையத்திற்கு இறக்கிவிட்டு பேருந்தை சரிபார்க்க தவறிவிட்டார். மதிய உணவு இடைவேளையின் போது மேற்பார்வையாளர் தனது பையை கவனிக்கும் வரை சிறுவன் பேருந்திற்குள் தூங்கிக் கொண்டிருந்துள்ளான்”என்று அல் மத்ரூஷி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“அவர்கள் சிறுவனை பேருந்தில் மூச்சுத் திணறலில் தவிப்பதைக் கண்டு அஜ்மானில் உள்ள அமினா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பேருந்திற்குள் மூச்சுத் திணறல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக சிறுவன் இறந்துள்ளான். மேலும் அந்த மையமானது முன்னர் உரிமம் பெற்றதைத் தவிர்தது வேறு செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது”.
“அதனைத் தொடர்ந்து மையத்தின் மேலாளர், பேருந்து மேற்பார்வையாளர் மற்றும் ஓட்டுநரை கைது செய்ய அஜ்மான் பொது வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது” என்று அல் மெட்ரூஷி கூறினார்.
அத்துடன் எல்லா நேரங்களிலும் குழந்தைகளை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, அபுதாபி காவல்துறையினர் ஷாப்பிங் செய்யும் போது அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் குழந்தைகளை தனியாகவும், கவனிக்கப்படாமல் வாகனங்களுக்குள் விட்டுவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று எச்சரித்திருந்தனர்.
“வீடுகளில் அல்லது பிற இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்குள் குழந்தைகளை தனியாக விட்டுவிடுவது அலட்சியம், இது மரணம் போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது,” என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, பூட்டப்பட்ட வாகனத்தில் சிறுவர்களை விட்டு வெளியேறுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு நபருக்கு, 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
குழந்தைகளின் உரிமைகள், குறிப்பாக அவர்களின் மன, உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் குழந்தைகள் உரிமைச் சட்டம் அல்லது வதீமாவின் சட்டத்தின் (wadeema’s law) கீழ் இந்த தண்டனை வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.