இந்தியாவில் இருந்து சவூதிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!! காரணம் இதுதான்..!!

இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதன் கண்ணாடியில் (windshield) விரிசல் ஏற்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று காலை 7.52 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமானம், கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் கவனித்த பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு திரும்பினர். அதன்படி, காலை 8.50 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தற்பொழுது அமலில் உள்ள பயணத்தடையின் காரணமாக அது சரக்குகளை மட்டுமே எடுத்துச் சென்றது என்றும் அதில் பயணிகள் யாரும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், இந்த விமானமானது சரக்குகளை ஏற்றிக் கொண்டு சவூதியின் தம்மம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் அங்கு சென்றவுடன் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பும் இந்திய குடிமக்களை இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஏற்பட்டதையடுத்து விமானிகள் உட்பட அனைத்து குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் சிவி ரவீந்திரன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

விமானத்திற்கு முந்தைய சோதனையில் விரிசல் கண்டறியப்பட்டிருந்தால், விமானம் புறப்பட்டிருக்காது. எனவே, புறப்படும் போது அல்லது பயணத்தின் போது இது நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.