17 மாதங்களுக்குப் பிறகு பயணிகளை அனுமதிக்கும் சவூதி..!! இந்தியாவிற்குப் பயணித்தால் 3 வருட பயணத்தடையா..??

சவுதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சகம் வரும் ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலா பயணிகள் பயணத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான கோவிட் -19 பிசிஆர் சோதனை சான்றிதழ் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்தால் நிறுவன ரீதியாக தனிமைப்படுத்தப்படாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் என ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றை அந்த அறிக்கையில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சவூதி அரசால் ரெட் லிஸ்ட் நாடுகள் என பட்டியலிடப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளான இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், எதியோபியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சவூதி குடிமக்கள் பயணித்தால் அவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு சர்வதேச பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பில் அரசு சவூதி குடிமக்கள் என்று மட்டுமே தெரிவித்துள்ளது. எனவே இது வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களுக்கு பொருந்தாது என இதிலிருந்து தெரிகிறது.