இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான விமான பயண போக்குவரத்து தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதினால், இந்தியாவில் சிக்கித்தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் தற்போது கத்தார் வழியாக அமீரகம் செல்ல தொடங்கியுள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 12 ம் தேதி, கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்ததை தொடர்ந்து இப்போது பலரும் கத்தார் வழியாக அமீரகம் செல்ல முயல்வதாகவும் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கத்தார் வரும் பயணிகள் தங்கள் பயண தேதிக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்றும் கத்தார் நாட்டு சுற்றுலா துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆன்லைன் பயண நிறுவனமான முசாஃபிர் டிராவல்ஸ் நிறுவனத்தின் COO ரஹீஷ் பாபு கூறும்போது, “இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இப்போது கத்தார் நாட்டின் வருகை விசா (arrival visa) வழங்கப்படுகிறது. கத்தார் வரக்கூடிய பயணிகள் கட்டாரி எஹ்தெராஸ் அப்ளிகேஷனை (Qatari Ehteraz app) பதிவிறக்கம் செய்து பாஸ்போர்ட், பி.சி.ஆர் சோதனை முடிவு, ஹோட்டல் முன்பதிவு விவரங்கள் மற்றும் தங்கள் தகவல்களை பதிவேற்ற வேண்டும். பதிவேற்றியதும், பயணிகள் ஏழு முதல் எட்டு மணி நேரத்தில் முன் ஒப்புதல் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் கத்தார் தனது நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட பட்டியலை அறிவித்ததிலிருந்து, சிக்கித் தவிக்கும் பயணிகளின் தேவை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது என்று பாபு தெரிவித்துள்ளார். கத்தார் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மிகவும் அருகாமையில் இருப்பதாலும், அமீரகத்தை போன்ற கலாச்சார விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, ஆர்மீனியா அல்லது உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பதிலாக தற்போது அமீரகம் செல்பவர்கள் கத்தாரில் தனிமைப்படுத்தி கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முசாஃபிர் பயண நிறுவனமானது இந்தியாவிலிருந்து தோஹா வழியாக அமீரகம் செல்ல விமான டிக்கெட் விலை மற்றும் ஹோட்டல் தங்குமிடம் உட்பட 5,000 முதல் 6,000 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயித்திருப்பதாகவும், எனினும் கத்தார் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கே மேற்கொள்ளப்படும் ஒரு ஆன்-சைட் RT-PCR சோதனைக்கு ஆகும் செலவான 300 கத்தார் ரியால் (Dh298.1) பயணிகளால் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டிற்கு வரும் பயணிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா (கோவிஷீல்ட்), மற்றும் ஜான்சன் மற்றும் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சினோபார்ம் தடுப்பூசி எடுத்தவர்கள் நாட்டிற்குள் நிபந்தனைகளுடன் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
சினோபார்ம் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதும் ஆன்டிபாடி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், இதில் ஆன்டிபாடிகள் நேர்மறையாக இருந்தால், அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும், இல்லையெனில், அந்த பயணி புறப்படும் நாட்டின் அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்று பொது சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.