ADVERTISEMENT

உலகளவில் முதலிடம் பிடித்த அமீரகம்.. அதிக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக அறிவிப்பு..!!

Published: 5 Jul 2021, 5:48 AM |
Updated: 5 Jul 2021, 6:04 AM |
Posted By: admin

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு நாடுகளும் தங்களின் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதில் தங்கள் நாட்டில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடும் நாடுகளில், அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடாக உலகளவில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை அடைந்துள்ளது.

ADVERTISEMENT

ப்ளூம்பெர்க்கின் தடுப்பூசி கண்காணிப்புத் தரவுகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் 72.1 சதவீத மக்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் அமீரகத்தில் கோவிட் -19 தடுப்பூசியின் 15.5 மில்லியன் டோஸ்கள் இதுவரையிலும் நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்த படியாக 100,000 க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடான சீஷெல்ஸ் 71.7 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் அமீரகத்தில் பரவ தொடங்கியதிலிருந்து அதனை கட்டுப்படுத்த அமீரக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக தற்போது அமீரகம் இந்த பெருமையை பெற்றுள்ளது. மேலும் நாட்டில் இதுவரையிலும் 58.3 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 சோதனைகள் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உலகளவில் பயன்பாட்டுக்கு வந்ததும் அமீரகத்தில் சினோபார்ம், ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் வி மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு அமீரக அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. தற்போது ஐந்தாவதாக மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு பதிவு செய்வதற்கான ஒப்புதலை சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்த தடுப்பூசிகளை அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இலவசமாகவும், விருப்பமான அடிப்படையிலும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT