இந்தியா, இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அரசு அதிகாரிகளிடம் இருந்து முறையான அறிவிப்பு வராமல் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம் என பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய வகை கொரோனா பரவல் மத்தியில் ஐக்கிய அரபு அமீரகம் உள்வரும் விமானங்களுக்கு தடை விதித்ததிலிருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
முக்கிய விமான நிறுவனங்கள் அமீரகத்திற்கு வர விரும்பும் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை கிடைக்கச் செய்திருந்தாலும், பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகியவை பயணத்தடை எப்போது முடியும் என்பதற்கான இறுதி தேதியை இன்னும் வெளியிடவில்லை.
“சிக்கித்தவிக்கும் குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப வேண்டிய நிலை இருந்தாலும், உத்தியோகபூர்வ அரசாங்க ஆதாரங்களில் இருந்து தெளிவு கிடைக்கும் வரை பயணிகள் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன், ”என்று ஹாலிடேஸ் அட் கலடாரி ITS மற்றும் MICE இன் மேலாளர் வசீம் ராஜா கூறியுள்ளார்.
“ஒவ்வொரு விமான நிறுவனமும் அதன் பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கையில் வித்தியாசங்களைக் கொண்டிருப்பதால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் தெளிவு பெறுவது நல்லது. சில சந்தர்ப்பங்களில், ஏழு மாதங்களுக்குப் பிறகுதான் விமான நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற முடியும். ”
“உறுதிப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் குடியிருப்பாளர்கள் அமீரகம் வருவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யக்கூடாது என்று தேரா டிராவலின் பொது மேலாளர் டி.பி.சுதீஷ் உறுதியாகக் கூறியுள்ளார்.
“ஒரு பயணி விமான டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்திருந்து, டிக்கெட் விலையில் அதிகரிப்பு இருந்தால், அவர் அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.” என்று சுதீஷ் விளக்கியுள்ளர். “எடுத்துக்காட்டாக, பயணிகள் சென்னை-துபாய் டிக்கெட்டை 500 திர்ஹமிற்கு வாங்கியிருந்து, இறுதி பயண தேதி டிக்கெட் விலை 1,400 திர்ஹம் என்றால், அவர்கள் இன்னும் 900 திர்ஹம்களை கூடுதல் தொகையாக செலுத்த வேண்டும். இருப்பினும், மற்றொரு விமான நிறுவனம் அதே டிக்கெட்டை 1,000 திர்ஹமிற்கு வழங்கினால், பயணிகள் இழப்பை சந்திக்க நேரிடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தெளிவு இல்லாமல் இருந்தும் கூட விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவுகளை திறப்பதால், பலர் அமீரகத்திற்கு விரைவில் பயணிக்க வேண்டும் என நம்பி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது.
மேலும் சிலர் விமான சேவை துவங்கிவிடும் என நம்பி ஐந்து, ஆறு முறை டிக்கெட் முன்பதிவு செய்து அது ரத்தாகி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஃபி அகமது கூறுகையில், “ஏப்ரல் இறுதி முதல் விமான நிறுவனங்கள் பயணிகள் விமான சேவைக்கான ஏற்ற இறக்கமான தேதிகளைக் காட்டுகின்றன. முன்பதிவில் நீங்கள் எந்த பணத்தையும் இழக்கவில்லை என்றாலும், தேதி மாற்றங்களில் தொடர்ச்சியான மன அழுத்தத்தை எதிர்கொள்வது தனிநபருக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்”
கிடைக்கக்கூடிய முதல் டிக்கெட்டை இழப்பதைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, அகமது தெரிவிக்கையில், “இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் பற்றாக்குறை இருக்கலாம், இரண்டு நாட்களுக்கு கட்டணம் அதிகமாக இருக்கலாம். இருப்பினும், இரண்டு முதல் மூன்று நாட்களில், இது முறைப்படுத்தப்பட்டிருக்கும்” என கூறியுள்ளார்.
அண்மையில், இந்தியாவின் IATA முகவர்கள் சங்கம் (IATA Agents Association of India, IAAI) மற்றும் அதன் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் IAAI விமான பயணிகள் உரிமைகள் மன்றம் (Air Passenger Rights Forum, APRF) இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தலையிட்டு விமான நிறுவனங்கள் முழு பயண தடை விதிக்கப்பட்ட இடங்களுக்கு டிக்கெட் வழங்குவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த நாடுகளால் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்காமல் டிக்கெட்டுகளை வழங்க விமானங்களை அனுமதிப்பது சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, தெளிவற்றது மற்றும் தர்க்கம் இல்லாதது. ஒழுங்குமுறை அதிகாரிகள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்த காலத்தில் விமான டிக்கெட் முன்பதிவுகளை மீண்டும் தொடங்குவது, நுகர்வோர் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்” என்று சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.