வளைகுடா செய்திகள்

இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி விமான சேவைக்கு ஒப்புதல் அளித்த குவைத் அரசு..!! பயண நடைமுறைகள் என்ன..??

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து வெளிநாட்டவர்கள் குவைத் நுழைய குவைத் அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை நீக்கப்பட்டு ஆகஸ்ட் 1 முதல் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் பெர்மிட் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குவைத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவைத் பயணிக்க தடை நீடித்து வந்த நிலையில், தற்பொழுது இந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் நேரடி விமான சேவைகள் இயக்கப்படும் என குவைத் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இந்த நேரடி விமான சேவைகளானது வரும் ஆகஸ்ட் 22, ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குவைத் திரும்பும் குடியிருப்பாளர்கள் குவைத் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கான தடுப்பூசியின் முழு டோஸினையும் எடுத்துக்கொண்டு 14 நாட்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் தற்சமயம் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ரஜெனகா, ஃபைசர் பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் செலுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியே ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ரஜெனகா என்பதால் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு இந்தியாவில் இருந்து குவைத் வருவது எளிதாகும்.

ஒருவேளை குவைத் அரசு அங்கீகரிக்காத தடுப்பூசிகளான சினோஃபார்ம், சினோவாக் போன்ற தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூடுதலாக குவைத் அரசு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றைப் போட்டுக்கொண்டால் குவைத் திரும்பலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பில் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அத்துடன் பயணிகள் தங்களின் தடுப்பூசி சான்றிதழை குவைத் வந்திறங்கும் போது Immune அப்ளிகேஷனில் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிரீன் ஸ்டேடஸ் பெற பயணிகள் குவைத் சுகாதாரத்துறை அறிவித்துள்ள வலைதளத்தில் தங்களது தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். மேலும் தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட்டில் உள்ளபடி பெயர், தடுப்பூசி போடப்பட்ட தேதி, மின்னணு முறையில் சரிபார்க்க QR குறியீடு போன்றவை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், குவைத் திரும்பும் பயணிகள் பயணத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் Kuwait Mosafer மற்றும் Shlonik அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்திருக்க வேண்டும். குவைத்தில் வந்திறங்கியவுடன், குடியிருப்பாளர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்படுதலை விரைவில் முடித்துக்கொள்ள விரும்புபவர்கள், குவைத்தில் மற்றொரு PCR சோதனை செய்ய வேண்டும். அதில் எதிர்மறை முடிவு வந்தவுடன் அவர்கள் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி விமான சேவைகளுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவையின் இந்த அறிவிப்பை அடுத்து, இந்தியா, இலங்கையில் சிக்கித்தவித்துள்ள குவைத் குடியிருப்பாளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!