பயணத்தடையை நீக்கிய குவைத்..!! பல மாதங்களாக சிக்கித்தவித்த வெளிநாட்டவர்கள் மீண்டும் குவைத்திற்குப் பயணம்..!!

கடந்த ஆறு மாத காலமாக வெளிநாட்டவர்கள் பயணிக்க பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த குவைத்தில் இன்று ஆகஸ்ட் 1 முதல் அத்தடை நீக்கப்பட்டு மீண்டும் குவைத்தின் குடியிருப்பாளர்கள் குவைத்திற்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாவிற்கெதிராக குவைத் அரசு அங்கீகரித்துள்ள தடுப்பூசி போட்ட நபர்களுக்கே குவைத்திற்குள் நுழைய அனுமதி என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, பல மாதங்களாக சிக்கித் தவித்த வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள் தற்பொழுது குவைத் திரும்பி வருகின்றனர்.

அதில் பெரும்பாலானோர் துருக்கி, ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்திருந்த பயண நடைமுறைகளில் கூறியுள்ளதன்படி சுகாதாரத் துறையிடம் தடுப்பூசி சான்றிதழுக்கான ஒப்புதல் பெற்றிருப்பது, நெகடிவ் PCR சோதனை அறிக்கை போன்றவற்றை பயணிகள் முறையாக கடைபிடித்ததாகவும் குவைத் விமான நிலையத்தில் இதற்கான செயல்முறையானது எந்த சிரமமும் இல்லாமல் எளிதில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் இருந்து குவைத்திற்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அரசின் சார்பாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து குவைத் பயணிக்கவுள்ளவர்கள் வேறொரு நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.