இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வருவதற்கு மூன்று மாத காலத்திற்கு மேலாக தடை நீடித்த நிலையில், ஆகஸ்ட் 5 முதல் குறிப்பிட்ட குடியிருப்பாளர்கள் அமீரகம் வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற குடியிருப்பாளர்கள்; மற்றும் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் வர விரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் மத்திய மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவில் இருந்து அமீரகத்திற்கு வர தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் அமீரகத்திற்கு இடையேயான விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இந்தியாவிலிருந்து சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களின் முதல் குழுவானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வந்திறங்கியுள்ளனர்.
கேரளாவின் கொச்சினிலிருந்து இரண்டு எமிரேட்ஸ் விமானங்கள் ஆகஸ்ட் 5 வியாழக்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கின. அதில் பயணித்த பயணிகளில் ஒருவரான அஷ்ரஃப் விமானத்தில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகக் கூறினார்.
பயணிகளுக்கான கொரோனா தடுப்பூசி சம்பந்தமான கேள்விக்கு அவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட பயணிகளே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.”
மேலும் துபாயில் வழங்கப்பட்ட விசா வைத்திருந்து துபாய் பயணிப்பவர்களுக்கான ஒப்புதல் செயல்முறையானது மற்ற எமிரேட்ஸில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்களிடமிருந்து வேறுபடுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
துபாய் விசா வைத்திருப்பவர்கள் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (GDRFA) பொது இயக்குனரகத்தின் இணையதளத்தில் ஒப்புதலைப் பெற வேண்டும்.
மற்ற எமிரேட்ஸில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்தின் (ICA) இணையதளத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என கூறியுள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளர், ராஜேஷ் புறக்கோட், ஆகஸ்ட் 4 அன்று ரூ .19,200 (திர்ஹம் 950) க்கு ஒரு பயண முகவர் மூலம் தனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில், “நான் அதே நாளில் என் PCR சோதனை மேற்கொண்டேன். மாலைக்குள் முடிவு வந்தது, துபாயில் உள்ள எனது சகோதரர் GDRFA இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, சமர்பபித்த பிறகு ஒப்புதல் கிடைத்தது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்புதல் செயல்முறைக்கு சுமார் 30 நிமிடங்கள் எடுத்தது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பயணித்த விமானத்தில் சுமார் 25 பேர் மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் துபாய் விமான நிலையம் வந்தடைந்தவுடன் ஒரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.