வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் குடியிருப்பாளர்களில் தங்களின் சொந்த நாட்டில், ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்களும் அமீரகம் திரும்பி வரலாம் என்ற புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள, குடியிருப்பாளர்கள் தங்கள் விவரங்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை ICA வில் பதிவு செய்வதன் மூலம் அவர்களும் அமீரகம் திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பதாரர்கள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICA) அப்ளிகேஷன் அல்லது இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு தடுப்பூசி சான்றிதழ்களை இணைத்து பதிவு செய்யலாம் என்று ஒரு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில கொரோனா நிலைமை குறித்த புதுப்பிப்புகளை வழங்கும் வாராந்திர மாநாட்டில் உரையாற்றிய ICA அதிகாரி, ஆகஸ்ட் 15 முதல் பயணிகள் இந்த பதிவு செயல்முறையைத் தொடங்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இந்த செயல்முறை பயணிகளின் தடுப்பூசி நிலையை தானாகவே சரிபார்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்முறைக்கு அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும், அவர்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசி பயணிகளின் AlHosn அப்ளிகேஷனில் பிரதிபலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான செயல்முறை எளிதானது என்று ICA விளக்கியுள்ளது. பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களை நிரப்புவது, அமீரகத்தில் உள்ள தங்கள் முகவரியை உள்ளிடுவது மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை இணைப்பது ஆகியவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி மேலும் கூறுகையில், “நாட்டிற்கு வரும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், அவர்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்களுக்கு இந்த பதிவு விருப்பமானது என்றும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் அனைவரும் நாட்டில் பொருந்தும் அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.