ADVERTISEMENT

தொழிலாளர்களை நெகிழச் செய்த அமீரக காவல்துறையின் மனிதாபிமான செயல்..!!

Published: 14 Aug 2021, 5:42 AM |
Updated: 14 Aug 2021, 6:03 AM |
Posted By: admin

சாதாரண வெயிலில் நின்று வேலை பார்ப்பதே நம்மில் பலருக்கு கடினமாக இருக்கும் பொழுது  அமீரகத்தில் கோடைகாலத்தின் போது 50டிகிரி செல்சியஸுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும். இந்த நிலையில் திறந்த வெளியில் வேலை பார்ப்பது என்பது மிக மிக கஷ்டமான ஒன்றாகும்.

ADVERTISEMENT

இருப்பினும் தங்கள் குடும்ப சூழ்நிலை கருதி கொளுத்தும் வெயில் என்று கூட பாராது வியர்க்க வியர்க்க உழைத்து சம்பாதிக்கின்றனர் தொழிலாளர்கள்.

இவர்களின் நிலைமை உணர்ந்து கோடைகாலத்தின் மதிய நேரங்களில் ஓய்வு நேரமானது அமீரக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி காவல்துறையினரின் ஹேப்பினஸ் பேட்ரோல் (abudhabi police happiness patrol) குழுவினர், கொளுத்தும் வெயிலில் திறந்த வெளிகளில் வியர்வை சுரக்க வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மினி குடைகள் மற்றும் குளிர்ந்த நீர் பாட்டில்களை வழங்கி வருகிறது.

அபுதாபி காவல்துறையில் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகம் மூலம் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ‘அவர்களின் துன்பத்தை நாங்கள் எளிதாக்குகிறோம்’ (We Ease Their Suffering) என்ற தலைப்பில் இந்த மனிதாபிமான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை பராமரிக்கும் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர், பால் மற்றும் மினி குடைகளை ரோந்துப் படையினர் நகர் முழுவதும் சென்று வழங்கி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அபுதாபி காவல்துறையின் சமூகப் பங்கை மேம்படுத்த இந்த திட்டம் முயல்கிறது.

“இந்த இயக்கம் உழைப்பை அங்கீகரிப்பதையும் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் வெளிப்புற தளங்களில் வெப்பநிலையைத் தாங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

“இது தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து கருவிகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் வெப்பச் சோர்வு, வெயில் மற்றும் பிற கோடை நோய்களின் அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற முயற்சி அல் அய்னில், போதைப்பொருள் எதிர்ப்புத் துறையுடன் ஒன்றிணைந்து ‘மேக் இட் கூல் டு தெம் (make it cool to them’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கார்டன் சிட்டியில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு குடைகள் மற்றும் குளிர்ந்த நீர் விநியோகிக்கப்படுகின்றன.