இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய விரைவான பிசிஆர் சோதனை எனப்படும் ரேபிட் PCR சோதனையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய ஆறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் பயணிகள் துபாய் திரும்புவதற்கு நான்கு மணி நேரத்திற்கு பதிலாக அவர்கள் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் விரைவான பிசிஆர் சோதனையை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து பயணிகள் துபாய் வருவதற்கு இதுவரையிலும் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான ரேபிட் PCR சோதனை முடிவைக் காட்ட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து ஒரு புதிய அறிவிப்பை பெற்றதாகவும், அதில் துபாய் வருவதற்கான செயல்பாடுகளை எளிதாக்க விமான நிறுவனங்களுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கான புதிய விதி பற்றிய அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் பயண முகவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அந்த புதிய விதி பற்றிய அறிவிப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவில் இருந்து துபாய் வரும் பயணிகள் இனிமேல் விமான நிலையத்தில் ஆறு மணி நேரத்திற்குப் முன்பாக விரைவான பிசிஆர் சோதனை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த அறிவிப்பில் “விரைவான பிசிஆர் சோதனை அறிக்கை SARS-COV-2 வைரஸ் RNA விற்கான நியூக்ளிக் அமிலத்தின் தரமான கண்டறிதலுக்காக வடிவமைக்கப்பட்ட மூலக்கூறு கண்டறியும் சோதனையை அடிப்படையாகக் கொண்டது என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும், இந்த சோதனை புறப்படும் விமான நிலையத்தில் நடத்தப்பட வேண்டும்” என்றும் துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.