ஆகஸ்ட் 27 முதல் வெளிநாடுகளிலிருந்து அபுதாபி செல்லும் பயணிகள் தங்கள் விமான பயணத்திற்கு முன் ICA தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்களின் தடுப்பூசி நிலையை அங்கீகரிக்க பயணத்திற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்பாக தங்கள் ஆவணங்களை ICA தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபுதாபியில் பொது இடங்களில் நுழைய தடுப்பூசி போடப்பட்டிருப்பது கட்டாயம் என்பதால் வெளிநாடுகளிலிருந்து அபுதாபி வரும் பயணிகளின் கிரீன் ஸ்டேட்டஸை பராமரிக்க இந்த நடைமுறை அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டாய பதிவானது பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கும் பொருந்தும் என்றும், அபுதாபி விமான நிலையம் வந்திறங்கி துபாய் அல்லது மற்றொரு எமிரேட்டுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமீரக குடிமக்கள் மற்றும் அபுதாபி வழியாக வேறொரு நாட்டிற்கு பயணிக்கும் ட்ரான்சிட் பயணிகளுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ICA வில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற இந்த அறிவிப்பை எத்திஹாட் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதுடன், இந்த வழிகாட்டுதல்கள் சமீபத்திய அரசாங்க உத்தரவுகளுக்கு ஏற்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ICA ஸ்மார்ட் டிராவல் சர்வீஸ் அபுதாபிக்கு வந்தவுடன் பயணிகளுக்கு நெறிப்படுத்தப்பட்ட பயண அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த செயல்முறையானது வெளிநாடுகளில் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட பயணிகளுக்கு அவர்களின் தடுப்பூசி நிலையை ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்க அனுமதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபி பயணிக்கும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்கள் ICA தளத்தில் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்றம் செய்ய தேவையில்லை எனவும், அவர்கள் பயணத்திற்கு முன் தங்களின் பயணம் குறித்து ICA வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் விமான நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி முதல் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டிருந்து அல் ஹோஸ்ன் பயன்பாட்டில் கிரீன் நிலை இருந்தால் மட்டுமே மக்கள் அபுதாபியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற பொது இடங்களில் நுழைய முடியும் என்ற விதிமுறை அமலுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.