அமீரக செய்திகள்

முக்கியச் செய்தி: அமீரகத்தில் சில பொது இடங்களில் இனி முக கவசம் அணிய தேவையில்லை..!! மகிழ்ச்சியில் குடியிருப்பாளர்கள்..!!

கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவத்தால் உலகெங்கிலும் உள்ள மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சில தேவைப்படும் இடங்களில் மட்டுமே முக கவசம் அணிந்திருப்பவர்களைப் பார்த்து வந்த நாமும் கூட முக கவசத்தை தினமும் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாற்றக்கூடிய சூழல் உருவாகியது.

உலகம் முழுவதும் எண்ணிலடங்கா உயிர்களைக் கொன்று குவித்த  கொரோனாவின் ஆட்டம் மக்கள் மேற்கொண்ட தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக குறைந்துள்ளது.

அமீரகத்தில் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துள்ளது.

இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் சில பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் 22, புதன்கிழமை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளதன் படி, முக கவசம் அணியவில்லை என்றாலும் மக்கள் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிவித்துள்ளதன்படி, பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை.

ஒரே வீட்டில் இருப்பவர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் தனியாக போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முக கவசம் தேவையில்லை. கூடுதலாக கடற்கரைக்குச் செல்வோர் மற்றும் நீச்சல் குளங்களுக்கு செல்பவர்களுக்கும் முக கவசம் அணிய தேவையில்லை.

முக கவசம் அணிய தேவையில்லாத பிற இடங்களில் மூடிய அறைக்குள் தனிநபர்கள் இருக்கும் இடங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவை அடங்கும்.

இது தவிர மற்ற அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. “வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முக கவசம் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாக இருக்கின்றன” என்று NCEMA கூறியுள்ளது.

ஆணையத்தின் இந்த முடிவினால் குடியிருப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலகளவில் அதிகமான தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். அமீரகத்தில் 92 சதவிகித குடியிருப்பாளர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர். 81 சதவிகித மக்களுக்கு மேல் முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!