தொழில்நுட்பத்தில் பலவிதமான புதுமைகளை புகுத்தி வரும் துபாயில் தற்போது கேஷ் கவுண்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமலேயே வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பியதை ஷாப்பிங் செய்யும் புது வகையான டிஜிட்டல் ஷாப்பிங் சென்டர் திறக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இயங்கிவரும் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான கேரிஃபோரால் (carrefour) நேற்று திங்கள் கிழமை (செப்டம்பர் 6) மால் ஆஃப் தி எமிரேட்ஸில் திறக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் ஷாப்பிங் சென்டரில், தங்களின் மொபைலில் ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence – AI) மூலமாக விரும்பிய பொருட்களை எடுத்துக்கொண்டு கேஷ் கவுண்டரில் பணம் செலுத்த வரிசையில் நிற்காமல் வெளியேற முடியும்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடையற்ற மற்றும் தொடர்பற்ற ஷாப்பிங்கை வழங்கவிருக்கும் கேரிஃபோர் சிட்டி+ எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கடையை அமீரகத்தின் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைதூர வேலை பயன்பாட்டுத் துறை அமைச்சர் ஓமர் பின் சுல்தான் அல் ஒலமா, மற்றும் மஜீத் அல் ஃபுத்தைம் ஹோல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி அலைன் பெஜ்ஜனி மற்றும் மஜித் அல் ஃபுத்தைம் சில்லறை வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹானி வெய்ஸ் ஆகியோர் நேற்று திறந்து வைத்துள்ளனர்.
இங்கு செல்லக்கூடிய வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைய தங்கள் தொலைபேசிகளில் உள்ள அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும். உள்ளே சென்றவுடன், வாடிக்கையாளர்களால் எடுக்கப்படும் ஒவ்வொரு பொருளும் தானாகவே டிஜிட்டல் ஷாப்பிங் பாஸ்கெட்டில் சேர்க்கப்படும். இறுதியாக டிஜிட்டல் முறையிலேயே எடுக்கப்பட்ட பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.
மஜித் அல் ஃபுத்தைம் ரீடெயிலின் தலைமை டிஜிட்டல் அதிகாரி நல்ல கருணாநிதி கூறுகையில், வாடிக்கையாளர்கள் செக் அவுட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதே இந்த புதுமையான ஷாப்பிங் அனுபவத்தைத் தொடங்க ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய ஸ்டோரில் தின்பண்டங்கள், பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் உட்பட 1,300 க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 75 சதுர மீட்டர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள இந்த கடையில் மொத்தம் 97 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் விவரிக்கையில், “இந்த கேமராக்கள் இரண்டு விஷயங்களைச் செய்கிறது. முதலில், இது AI மூலம் ஒவ்வொரு பொருட்களையும் கண்காணிக்கிறது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை 99 சதவிகித துல்லியத்துடன் கணிக்கிறது. இரண்டாவதாக, இது வாடிக்கையாளரின் இயக்கத்தைக் கண்காணிக்கிறது மற்றும் பொருட்களை அடையாளம் காட்டுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.