அமீரக செய்திகள்

UAE: அட.. இதற்கும் இனி ட்ரோன் தானா..?? ட்ரோன் மூலம் தடுப்பூசி, மருந்துகள் டெலிவரி..!! அபுதாபியில் விரைவில் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம்..!!

பல்வேறு துறைகளில் நவீனங்களைப் புகுத்தி வரும் அமீரகம் தற்பொழுது மருத்துவத்துறையில் புதியதொரு திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.

அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சுகாதார மையங்களுக்கு இடையில் தடுப்பூசிகள், இரத்தம் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல ட்ரோன்கள் விரைவில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.

அபுதாபி சுகாதாரத் துறை (DoH) இந்த திட்டம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் முதல் முறையாக செயல்படுத்தப்பட இருப்பதாகவும் 2022 ம் ஆண்டு முழுவதும் 40 நிலையங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்தி அதிநவீன டெலிவரி நெட்வொர்க்கை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன் டெலிவரி அமைப்பு 24 மணி நேரமும் செயல்படும் மற்றும் அபுதாபியின் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் மற்றும் இரத்தம் தவிர, இந்த சிறிய அளவிலான ட்ரோன் அபுதாபி நகரைச் சுற்றியுள்ள ஆய்வகங்கள், மருந்தகங்கள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு இடையில் மருந்துகள் மற்றும் சோதனை மாதிரிகளை எடுத்துச் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

DoH இன் தலைவர் அப்துல்லா பின் முகமது அல் ஹமீத் கூறுகையில், “மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தும் முதல் நகரமாக அபுதாபியை உருவாக்க எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலனுக்காக சுகாதாரத் துறையை மேம்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு சுகாதார அமைப்பை உருவாக்கும் அதே வேளையில், அபுதாபியை உலகளாவிய சுகாதார மையமாக நிறுவுவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என கூறியுள்ளார்.

அபுதாபி சுகாதாரத்துறை DoH, பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA), SkyGo மற்றும் Matternet ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SkyGo மற்றும் Matternet ஆகியவை சோதனையின் முதல் கட்டத்தை முடித்துவிட்டன மற்றும் இப்போது இரண்டாம் கட்டவேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு தெலுங்கானாவில் ட்ரோன் மூலமாக கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!