ஓமான் கடலில் மையம் கொண்டுள்ள ஷஹீன் புயலின் தாக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளுக்கும் நீண்டுள்ளதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அமீரக அரசு ஏற்கனவே பொதுமக்களை அறிவுத்தியுள்ளது.
இந்நிலையில், ஷார்ஜாவின் கல்பா நகரில் ஓமான் கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடல் நீர் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் பதிவாகியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
இதற்கு முன்னதாக வெப்பமண்டல சூறாவளியான ஷஹீன் காரணமாக கடல் நீர் குறிப்பாக ஓமன் கடலில் உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தேசிய வானிலை மையத்தின் (NCM) அதிகாரி சலீம் அல் தர்ஹானி இன்று ட்விட்டரில் கூறியிருந்த நிலையில், தற்போது கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் ஷார்ஜா கடல் பகுதியில் பதிவாகியுள்ளது .
மேலும் “ஓமான் கடல் ஷஹீன் புயலின் காரணமா சீற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கடற்கரையிலிருந்து விலகி இருக்க வேண்டும். புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளிலிருந்து விலகி பாதுகாப்பாக இருங்கள்” என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.