ஒவ்வொரு வருடமும் துபாயில் வெகு விமரிசையாக நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (Dubai Shopping Festival) 27-வது பதிப்பு இந்த வருடம் வரும் டிசம்பர் 15 முதல் அடுத்த வருடம் ஜனவரி 29 வரை நடைபெறும் என்று தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) நிகழ்வுகளானது டிசம்பர் 15 ஆம் தேதி ஒரு கோலாகலமான தொடக்கத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வுகளில் உலகப் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளி மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், ட்ரோன் நிகழ்ச்சி, மால்களில் ப்ரொமோஷன், தள்ளுபடி, பொழுதுபோக்கு மற்றும் பல புதிய சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாய் பெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடைல் எஸ்டாபிளிஷ்மென்ட் (DFRE) ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டிற்கான DSF பங்கேற்கும் அனைத்து மால்கள் மற்றும் நிகழ்வு இடங்களிலும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த DSF நடைபெறும் 46 நாட்களும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் புதுமையான அனுபவங்களை பெறலாம்.
துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களின் (DFRE) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா கூறுகையில், “துபாய் இயல்பு நிலைக்கு மீண்டு உலகெங்கிலும் உள்ள அனைத்து பயணிகளையும் சுற்றுலாவாசிகளையும் அனுமதிக்கிறது. மேலும் எக்ஸ்போ 2020 கொண்டாட்டம் மற்றும் அமீரகம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த சிறந்த ஆண்டில் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
DSF-ல் பிரத்யேக கண்காட்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், வேடிக்கை கண்காட்சிகள் மற்றும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்வுகள், எக்ஸ்போ தளத்தில் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.