புர்ஜ் அல் அரப் ஹோட்டலை சுற்றிப்பார்க்க ஆசையா.. பார்வையாளர்களுக்கு அனுமதி.. டிக்கெட் எவ்வளவு..??

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை கொண்டிருக்கும் துபாயின் உலக புகழ் பெற்ற மற்றுமொரு அடையாள சின்னமான புர்ஜ் அல் அரப் கட்டிடத்தை அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் சுற்றிபார்ப்பதற்கான வாய்ப்பை இன்று அக்டோபர் 15 முதல் வழங்குவதாக ஜுமைரா குழுமம் தெரிவித்துள்ளது.

ஜுமைரா குழுமம் அறிவித்துள்ள இந்த வழிகாட்டல் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள் 399 திர்ஹத்தில் இருந்து தொடங்குவதாகவும், இந்த வழிகாட்டல் சுற்றுப்பயணம் குழுவாக மேற்கொள்ளப்படும் என்றும், ஒவ்வொரு குழுவிலும் 12 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

மேலும் ஒவ்வொரு குழுவும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை புறப்படும் என்றும், தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8.30 வரை பார்வையாளர்களுக்கான இந்த வழிகாட்டல் சுற்றுப்பயணம் செயல்படும் என்றும் ஜுமைரா குழுமம் குறிப்பிட்டுள்ளது.

ஜுமெய்ரா குழுமம் அறிவித்துள்ள இந்த புர்ஜ் அல் அரப் கட்டிடத்தின் சுற்றுப்பயணத்தில், பார்வையாளர்கள் புர்ஜ் அல் அரேபின் புகழ்பெற்ற ஏட்ரியத்தில் உள்ள சான் எட்டார் ஹோட்டலின் 24 காரட் அல்டிமேட் கோல்ட் கப்புசினோ அல்லது அதன் தத்துவம் வாய்ந்த தேநீர் உள்ளிட்ட அனுபவங்களை பெற விருப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அனுபவம் குறித்து புர்ஜ் அல் அரப் ஜுமைராவின் பிராந்திய துணைத் தலைவரும் பொது மேலாளருமான எர்மன்னோ ஜானினி கூறுகையில் “உலகப் புகழ்பெற்ற அடையாளச் சின்னமான புர்ஜ் அல் அரபின் உட்புற பகுதியை பார்வையிட சுற்றுலாவாசிகளுக்கு, குறிப்பாக துபாயில் நடைபெறும் உலகின் மிகச்சிறந்த நிகழ்ச்சியான எக்ஸ்போ 2020 யை காணவரும் பார்வையாளர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்களுக்காக திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “புர்ஜ் அல் அரப் ஜுமைரா சுற்றுப்பயணம் உலகிற்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கும், இந்த சுற்றுப்பயணம் புர்ஜ் அல் அரபின் கட்டிட சிறப்பு மட்டுமில்லாமல், அதன் மக்கள், படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை, அமீரக விருந்தோம்பல், அரேபிய செழுமை மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவை உள்ளிட்டவற்றால் ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும். புர்ஜ் அல் அரபின் தனித்துவமான இந்த அனுபவத்தை உலகிற்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற ஹோட்டல் ஏட்ரியம் மற்றும் ராயல் சூட் ஆகியவற்றை பார்வையிடுவதை தவிர, பார்வையாளர்கள் புர்ஜ் அல் அரப் ஜூமைராவின் கட்டிடக்கலையை உயிர்ப்பிக்கும் வகையில் டிஜிட்டல் உரையாடல் மூலம் அதன் வரலாற்றை மீண்டும் பெறலாம். மேலும் உலகளாவிய ஐகானை உருவாக்கிய அசல் கட்டிடக் கலைஞரின் விரிவான வடிவமைப்புகளுடன், துபாய் மற்றும் ஜுமேராவின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால கதை போன்ற அனுபவத்தை பெறுவார்கள் என்றும் ஜுமைரா குழுமம் அறிவித்துள்ளது.

புர்ஜ் அல் அரப் ஜுமைராவின் வழிகாட்டல் சுற்றுப்பயணத்திற்கு ஆர்வமுள்ள பார்வையாளர்கள், அதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் insideburjalarab.com என்ற இணையதளத்தில் அல்லது நேரடியாக டிக்கெட் அலுவலகம் மற்றும் ஜுமேரா பீச் ஹோட்டலில் அமைந்துள்ள வரவேற்பு பகுதியில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.