அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், “முன்னணி ஹீரோக்கள்” என அழைக்கப்படும் சுகாதார ஊழியர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோல்டன் விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் கொரோனா தொற்றுநோய் முழுவதும் நாட்டையும் நாட்டில் வசிக்கும் மக்களையும் பாதுகாக்க அவர்களின் அசாதாரண பங்களிப்பை அளித்துள்ளதன் அடிப்படையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
WAM இன் கூற்றுப்படி, இந்த முயற்சி சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மேம்பட்ட நிலைத்தன்மையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உதவும் நிபுணர்களுக்கு நீண்ட கால ரெசிடென்ஸ் உரிமையை வழங்குவதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பைப் பேணுவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை மாதம், ஐக்கிய அரபு அமீரக அரசானது அரசு மருத்துவர்களை “தங்கள் முயற்சிகள் மற்றும் தியாகங்களை அங்கீகரிக்கும் வகையில்” கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்தது.
அமீரக சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகளால் உரிமம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் ஜூலை 2021 மற்றும் செப்டம்பர் 2022 க்கு இடையில் smartservices.ica.gov.ae என்ற இணையதளத்தின் மூலம் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும், துபாயில் உரிமம் பெற்ற மருத்துவர்கள் smart.gdrfad.gov.ae மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாவிற்கு சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகள் விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.