அமீரகத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் சுகாதார மையங்களில் ஏதேனும் சுகாதார முறைகேடுகளை கண்டறிந்தால் அது குறித்து புகாரளிக்க மின்னணு அமைப்பைப் பயன்படுத்துமாறு அமீரக குடியிருப்பாளர்களை சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (Mohap) வலியுறுத்தியுள்ளது.
சுகாதாரத்துறையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் அரசின் சுகாதார வசதிகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை இந்தச் சேவை உறுதி செய்கிறது என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுமையான தீர்வுகள் மற்றும் தரமான அமைப்புகள் மூலம் நாட்டில் மருத்துவ சேவைகள் வழங்குவதன் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இ-சேவைகளை மேம்படுத்துவதில் அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
மேலும் இந்த மின்னணு புகார் அமைப்பானது, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் அவற்றின் மருத்துவப் பணியாளர்கள் பற்றிய மருத்துவம் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக புகாரளிப்பதை பொதுமக்களுக்கு எளிதாக்குகிறது. மேலும், விசாரணைகள் முடிவடைந்து இறுதி முடிவு வரும் வரை புகார் அளித்தவர் தனது புகாரின் நிலையை கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்துவதில் எளிமை, பாரபட்சமற்ற தன்மை, ரகசியத்தன்மை மற்றும் புகார்தாரர் வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மை ஆகிய விஷயங்களில் இந்த புதிய அமைப்பு சிறந்தது என்றும், இது புகார்களை சிறப்பாகக் கையாள உதவுகிறது மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த ஒரு நல்ல தரவுக் குறிப்பை வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
Mohap இன் உரிமம் வழங்கும் பிரிவின் தலைவர் அபீர் ஆதில் கூறுகையில், “தனியார் மருத்துவ வசதிகள் மற்றும் அவர்களின் ஊழியர்களின் முறைகேடுகளைப் புகாரளிப்பதற்கான இ-புகார் அமைப்பு Mohap இன் இ-சேவைகள் தொகுப்பின் ஒரு பகுதியாகும், இது சுகாதார அமைப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் சேவைகளை மேம்படுத்துவதற்கும், பொதுக் கொள்கைகள் மற்றும் அரசின் உத்திகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் தீர்வுகள் மற்றும் தரமான அமைப்புகளை கடைபிடிக்கவும் இது ஸ்மார்ட் அமைப்பை புதுமைப்படுத்துகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் சுகாதார வசதிகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது மருத்துவப் பிழைகள் இருந்தால், அவை நிரூபிக்கப்பட்டால் , துல்லியமாகவும் வெளிப்படையாகவும் கையாள்வதில் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்த நாடுகளை விட உலகளாவிய விகிதங்களுக்குள் குறைந்த புகார்களின் எண்ணிக்கை இருப்பதற்கு காரணம் தனியார் சுகாதார வசதிகளுக்கு உரிமம் வழங்கும் போது அமைச்சகம் கடைபிடிக்கும் கடுமையான தரநிலைகள் மற்றும் தேவைகளுக்காக நன்றியையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் அவ்வப்போது ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு பிரச்சாரங்கள் மற்றும் கிளினிக்குகளின் ஒத்துழைப்பு ஆகியவை தரமான சுகாதார சேவையை நாட்டில் உறுதி செய்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடு, தணிக்கை மற்றும் ஆய்வுத் துறையின் இயக்குநர் டாக்டர் ஹெஸ்ஸா அலி முபாரக் கூறியதாவது, “தனியார் மருத்துவ வசதிகளின் சுகாதார இணக்கத்தை அடைய அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் புகார்களைக் கையாள்வதை எளிதாக்கும் வகையில், தற்போதுள்ள நடைமுறைகளுக்கு இந்த புதிய மின்னணு அமைப்பு ஒரு முக்கிய வசதியாக உள்ளது. இந்த மின்னணு அமைப்பு, அனைத்து தனிநபர்கள், குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள், தனியார் சுகாதார வசதிகள் பற்றிய புகார்களை அனைத்து ஆதாரங்களுடன் பதிவு செய்ய அனுமதிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மின்னணு அமைப்பில் பதியப்படும் புகார் சம்பவம் குறித்து விசாரிக்க நடுநிலை மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அக்குழுவினர் இரு தரப்பினரையும் விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மருத்துவர் பின்பற்றும் நடைமுறைகளை நடுநிலை மருத்துவக் குழுவினர் மதிப்பீடு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் Mohap ல் உள்ள மருத்துவ உரிமம் சார்ந்த குழுவிடம் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் தொடர்பு கொள்ளவும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், தனியார் சுகாதார வசதிகளில் தவறுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், மருத்துவ அலட்சியம் மற்றும் பிழைகளை குறைக்கவும் தனியார் சுகாதார நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்னர், அரசால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை மீறிய தனியார் சுகாதார நிலையங்கள் ஆய்வுகளில் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மேலும் சில தனியார் சுகாதார நிலையங்கள் மூடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.