ADVERTISEMENT

மூன்று உயிர்களைக் காப்பாற்றிய இந்திய குடும்பத்திற்கு நன்றி தெரிவித்த துபாய் இளவரசர்..!! மகன் இறந்த கவலையையும் மீறி குடும்பம் மேற்கொண்ட உன்னத செயல்..!!

Published: 16 Oct 2021, 2:25 PM |
Updated: 16 Oct 2021, 2:33 PM |
Posted By: admin

இரண்டு வயது மகன் இறந்த பிறகு அச்சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த ஒரு இந்திய குடும்பத்திற்கு துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது நன்றி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

விவான் விஜயன் எனும் இறந்த சிறுவனின் உடல் உறுப்புகள் அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள மூன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு மூன்று உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இதனை அறிந்த துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்கள் சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்ததற்காக சிறுவனின் தந்தை விஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் ட்விட்டரில் “துபாயின் மிக அற்புதமான மனிதாபிமான நிலைப்பாட்டை உள்ளடக்கிய செய்தி எனக்கு கிடைத்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய அரபு அமீரகத்திலும் சவுதி அரேபியாவிலும் நோய்வாய்ப்பட்ட மூன்று குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்ததற்காகவும், இறந்த இரண்டு வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த விஜித் விஜயனின் குடும்பத்திற்கும், எல்லாம் வல்ல கடவுளுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன், “கடவுள் குழந்தை மீது கருணை காட்டட்டும். மேலும் மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அபுதாபியின் கிளீவ்லேண்ட் கிளினிக்கில், ஒரு இளம் சிறுவன் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பெற்றார், அதே நேரத்தில் ஒரு குழந்தைக்கு அல் ஜலீலா குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள ஒருவருக்கு இதயம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்றுச் சட்டமானது 2016 ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இறப்பு ஏற்பட்டால் இறந்தவர்களின் உறுப்புகளை தானமளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.