ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் ஃபைசர் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸினை அவசர கால பயன்பாட்டிற்காக சில குறிப்பிட்ட குடியிருப்பாளர்களுக்கு செலுத்த ஒப்புதல் அளித்துள்ளனர். துபாய் சுகாதார ஆணையமும் சில குடியிருப்பாளர்களுக்கு ஃபைசரின் பூஸ்டர் டோஸினை செஙவாய்க்கிழமை முதல் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கான தகுதிகளை அறிவித்த சுகாதார அதிகாரிகள், இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
சினோஃபார்ம் தடுப்பூசி போட்ட பிறகு ஃபைசர் அல்லது ஸ்புட்னிக் டோஸ் எடுத்தவர்கள் பூஸ்டர் டோஸ் பெற தகுதியற்றவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பின்வரும் பிரிவினருக்கு தற்சமயம் பூஸ்டர் டோஸ் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அவை:
>> 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்.
> 50-59 வயதிற்குட்பட்ட நீண்டகால நோய்கள் உள்ளவர்கள்.
> சுகாதார மையங்களில் நீண்ட கால பராமரிப்பில் ஈடுபடுபவர்கள்.
இந்த முடிவு “ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை” அடிப்படையாகக் கொண்டது என்று அமீரக சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் நூரா அல் கைத்தி தெரிவித்துள்ளார்.
“இந்த பூஸ்டர் கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசி செயல்திறன் காலப்போக்கில் குறைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகமானது உலகளவில் அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். தொற்றுநோயை நிவர்த்தி செய்வதில் ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது என்று டாக்டர் அல் கைத்தி தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் 20.2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கபட்டுள்ளன.
கிட்டத்தட்ட 95 சதவிகித மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 85 சதவிகிதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.