அமீரக செய்திகள்

UAE: மருத்துவ ஊழியர்கள் சொந்த ஊர் செல்ல இலவச இருவழி டிக்கெட்டுகளை வழங்கி கவுரவப்படுத்திய அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2020 ம் வருடத்தின் தொடக்கத்தில் முதன் முதலாக கொரோனா தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து தொற்றுநோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் அமீரக அரசால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாய் இருந்து அமீரகம் கொரோனாவில் இருந்து மீண்டு வர பெரிதும் பங்களித்தவர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள்தான்.

மேலும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தங்களுக்கும் நோய் பரவும் என்று தெரிந்திருந்தும் கூட, சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் மக்களையும் நாட்டையும் காக்க ஆற்றிய பங்கு பெரும் போற்றுதலுக்குரியது.

அவ்வாறு தங்களின் குடும்பத்தினரை பிரிந்தும், சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமலும் மருத்துவ சேவை ஆற்றி வந்த அத்தகைய சுகாதார பணியாளர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA), அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு சென்று வர இரு வழி (round trip) விமான பயண டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதை தொடர்ந்து ​​அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA) அபுதாபியில் பணிபுரியும் முன்களப்பணியாளர்கள் என அழைக்கப்படும் சுகாதார பணியாளர்களை அவர்களின் குடும்பங்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் தியாகத்திற்கான பாராட்டுக்களை காட்டியுள்ளது.

இது குறித்து SEHA அதன் சமூக வலைதள பக்கத்தில் “அவர்களின் தன்னலமற்ற முயற்சிகள் மற்றும் தியாகங்களுக்காக அங்கீகரிக்கப்படுவதற்கு அவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்கள்” என்றும் கூறியுள்ளது.

மேலும் உலகெங்கிலும் உள்ள எங்கள் சுகாதாரப் பணியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட எண்ணற்ற மணிநேரங்களை செலவிட்டனர். இதை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு வீடு திரும்புவதற்கான இரு வழி விமான பயணச் சீட்டை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றும் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள சில சுகாதாரப் பணியாளர்கள், தங்கள் சொந்த நாடுகளுக்கு பயணம் சென்று வர விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரிந்தபோது தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாகவும் அந்த வீடியோ பதிவில் SEHA குறிப்பிட்டுள்ளது. அதில் “என் குடும்பத்தை பிரிந்து இரண்டு நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன”, “வீடு திரும்புவதில் மிக்க மகிழ்ச்சி”, “மகிழ்ச்சியும் நன்றியும்” என்று சில சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியையும் அந்த வீடியோ காணொளியில் SEHA பகிர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக அபுதாபியில் பணிபுரியும் மருத்துவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு அமீரக அரசின் கோல்டன் விசாவை வழங்கியும் அபுதாபி அரசு கவுரவப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!