“அமீரகம் அனைவருக்குமான நாடு.. அனைவருக்குமான வீடு”..!! துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட ட்வீட்..!!

ஐக்கிய அரபு அமீரகம் அனைவருக்குமான நாடு மற்றும் அனைவருக்குமான வீடு என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கூறியுள்ளார்.

நேற்று அக்டோபர் 13, 2021 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வருடாந்திர Asda’a BCW எனும் அரபு நாட்டினை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் 13 வது பதிப்பை தொடர்ந்து ஷேக் முகமது அவர்கள் இதனை தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.

ஷேக் முகமது அவர்கள் வெளியிட்ட அந்த ட்வீட்டில், “ஐக்கிய அரபு அமீரகம் அனைவரின் நாடு மற்றும் அனைவரின் வீடு என்று நாங்கள் கூறுகிறோம். எங்கள் அனுபவம் அனைவருக்கும் கிடைக்கும். எங்கள் உறவுகள் அனைவரிடமும் நேர்மறையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Asda’a BCW ன் வருடாந்திர கருத்துக்கணிப்பின் முடிவில் அரேபிய இளைஞர்களில் 47 சதவிகிதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்தை தாங்கள் வாழ விரும்பத்தக்க நாடாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்தே துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தனது ட்வீட்டில் அமீரகம் அனைவருக்கும் பொதுவானது என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கருத்துக்கணிப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து 19 சதவீதம் பேர் அமெரிக்காவையும் மற்றும் 15 சதவீதம் பேர் கனடாவையும் தாங்கள் வாழ விரும்பும் நாடு என்று அரேபிய இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2012 முதல் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள இளம் அரேபிய ஆண்கள் மற்றும் பெண்களிடையே எடுக்கப்பட்டு வரும் இந்த கருத்துக்கணிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் விருப்பமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.