Uncategorized

உலகளவில் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த அமீரக பாஸ்போர்ட்..!!

ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட்டானது உலகிலேயே மிக வலிமை மிகுந்த பாஸ்போர்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டன் கேபிடல் (Arton Capital) வெளியிட்ட உலகளாவிய பாஸ்போர்ட் அட்டவணையில் (The Global Passport Index) உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது அமீரக பாஸ்போர்ட்.

அமீரக பாஸ்போர்ட் வைத்திருந்தால் 152 நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் 98 நாடுகள் விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன, 54 நாடுகள் அரைவல் விசா வழங்குகின்றன, 46 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்பு விசா தேவைப்படுகிறது.

அமீரக பாஸ்போர்ட் டிசம்பர் 2018 இல் முதல் முறையாக வலிமை வாய்ந்தது என அறிவிக்கப்பட்டு உலகளவில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் 2019 ஆம் ஆண்டில் தனது முதலிடத்தைத் தொடர்ந்து பராமரித்தது. ஆனால் 2020 இல் 14 வது இடத்திற்கு சரிந்தது. இருப்பினும், அமீரக பாஸ்போர்ட் அதன் பெருமையை மீண்டும் 2021 இல் பெற்று, உலகளவில் வலிமையானதாக உருவெடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை அங்கீகரித்தது, முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், சிறப்புத் திறமைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சில நிபந்தனைகளின் கீழ் எமிராட்டி குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டைப் பெற அனுமதி வழங்கியுள்ளது.

அமீரக குடியுரிமை பரந்த அளவிலான நன்மைகளை வழங்குகிறது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை நிறுவும் அல்லது சொந்தமாக்கும் உரிமை உட்பட சில உரிமைகள் கிடைக்கின்றன.

நியூசிலாந்தின் பாஸ்போர்ட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக வலிமையானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்ட் 146 நாடுகளுக்கு நுழைவதற்கான அனுமதி கிடைக்கிறது. ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 144 நாடுகளில் நுழையலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், இஸ்ரேலின் பாஸ்போர்ட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக வலிமையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வலிமை மிகுந்த பாஸ்போர்ட் தரவரிசையில் 47 வது இடத்திலும், பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதுகத்தாரின் பாஸ்போர்ட். கத்தார் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு மற்றும் 39 நாடுகளுக்கு அரைவல் விசாவில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் மற்றும் 107 நாடுகளில் பயணிப்பதற்கு முன் விசா தேவை.

இந்த தர வரிசையில், குவைத் பாஸ்போர்ட் 50 வது வலுவான இடத்திலும், பஹ்ரைன் 52 வது இடத்திலும், சவுதி அரேபியா 55 வது இடத்திலும், ஓமான் 56 வது இடத்திலும் உள்ளன.

உலகளவில், ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட் மிகவும் பலவீனமானது என்றும் அதைத் தொடர்ந்து ஈராக், சிரியா, பாகிஸ்தான், சோமாலியா, ஏமன், மியான்மர், பாலஸ்தீனப் பிரதேசங்கள், எரித்ரியா மற்றும் ஈரான் பலவீனமானபாஸ்போர்ட் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!