ADVERTISEMENT

UAE: சம்பளத்துடன் கூடிய 6 விதமான விடுமுறை பெற தனியார் துறை தொழிலாளர்களுக்கு அனுமதி..!! காரணங்கள் என்னென்ன..??

Published: 18 Nov 2021, 5:19 AM |
Updated: 20 Dec 2021, 8:42 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நவம்பர் 15 அன்று தனியார் துறையில் தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய ஆணையை வெளியிட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து வளர்ந்து வரும் தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நெகிழ்வுத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் இந்த புதிய ஆணைச் சட்டத்தை அறிவித்தது.

புதிய சட்டங்களின்படி, ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க உரிமை வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2, 2022 முதல், ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு விண்ணப்பிக்க ஊழியர்களுக்கு பின்வரும் ஆறு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. 

ADVERTISEMENT

>> தனியார் துறையில் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் விருப்பப்படி வாராந்திர ஓய்வு நாட்களை இதன் மூலம் அதிகரிக்கும் வாய்ப்பு ஊழியர்களுக்கு உள்ளது.

>> இறந்தவரின் உறவைப் பொறுத்து 3 முதல் 5 நாட்களுக்கு இடைப்பட்ட துக்க விடுப்பினை ஊழியர்கள் பெறலாம்.

ADVERTISEMENT

>> ஒரு நிறுவனத்தின் இரண்டு வருட பணி காலத்தை முடித்த பிறகு, அமீரகத்திற்குள் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தால், தொழிலாளர்கள் ஆண்டுக்கு 10 நாள் படிப்பிற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற தகுதியுடையவர்கள்.

>> தனியார் துறை ஊழியர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை 5 வேலை நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெற பெற்றோருக்கு உரிமை உண்டு. பெற்றோர் விடுப்பு என்பது குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் விண்ணப்பிக்கக்கூடிய ஊதியத்துடன் கூடிய விடுப்பு ஆகும்.

>> தனியார் துறையில் மகப்பேறு விடுப்பு 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த 60 நாட்கள் முழு ஊதியத்துடன் 45 நாட்கள், அதைத் தொடர்ந்து பாதி ஊதியத்தில் 15 நாட்கள் என பிரிக்கப்படும். தாய்மார்கள், பிரசவத்திற்குப் பிறகான சிக்கல்கள் அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், ஆரம்ப மகப்பேறு விடுப்புக் காலத்தை முடித்தவுடன், ஊதியம் இல்லாமல் கூடுதல் 45 நாட்கள் விடுமுறையைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்த கூடுதல் விடுப்பு பெற வேண்டியவர்கள் இதற்காக விண்ணப்பிக்க அது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும்.

>> சிறப்புத் தேவையுடைய குறைபாடுடன் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள், அவர்களது ஆரம்ப மகப்பேறு விடுப்புக் காலத்தை முடித்த பிறகு, 30 நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெற உரிமை உண்டு. மேலும் 30 நாட்களுக்கு ஊதியம் பெறாமல் தங்களின் விடுமுறை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.