ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் வரவிருக்கும் தியாகிகள் நினைவு தினம் மற்றும் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை அரசாங்க மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 1 புதன்கிழமை முதல் டிசம்பர் 3 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4, சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை தொடர்ந்து கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பணியைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில வருடங்களாக தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை போலவே விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கும் 3 நாட்கள் விடுமுறை என அறிவிப்பு மனித வள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் நிறுவன ஊழியர்களுக்கு 4 நாட்களும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் ஊழியர்களுக்கு 3 நாட்களும் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.