புத்தாண்டை முன்னிட்டு அபுதாபியில் ஜனவரி 1, 2022 சனிக்கிழமை முதல் ஜனவரி 2, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7:59 மணி வரை அபுதாபியில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த விடுமுறையின் போது முசாஃபா தொழில்துறை பகுதி வாகன நிறுத்துமிடம் M18 பகுதியிலும் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அபுதாபியின் நகராட்சி மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், போக்குவரத்தை தடுக்கும் முறையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், இரவு 9:00 மணி முதல் காலை 8:00 மணி வரை ரெசிடெனஸ் பெர்மிட் வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பான விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2022 சனிக்கிழமை விடுமுறையின் போது Darb டோல் கேட் அமைப்பு இலவசமாக இருக்கும். பின் ஜனவரி 2, 2022 ஞாயிறு அன்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் வழக்கமான பீக் ஹவர்ஸ் என சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமிருக்கும் நேரங்களில் டோல் கேட் கட்டணம் மீண்டும் அமலுக்கு வரும்.
அதே போல் ITC இன் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள் சனிக்கிழமையன்று மூடப்பட்டு, மீண்டும் திங்கட்கிழமை, ஜனவரி 3, 2022 அன்று செயல்படத் தொடங்கும்.
இருப்பினும் ITC இன் இணையதளத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ITC இன் சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.itc.gov.ae, Darbi மற்றும் Darb வலைத்தளங்கள் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக குடியிருப்பாளர்கள் இந்த சேவையினை பெறலாம்.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 என்ற எண்ணிலோ அல்லது டாக்ஸி அழைப்பு மையம் 600535353 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
பொதுப் போக்குவரத்தின் சமீபத்திய மேம்பாடுகளின்படி, வாரம் முழுவதும் ஒருங்கிணைந்த அட்டவணையின் அடிப்படையில் பொதுப் பேருந்து சேவைகள் செயல்படும் என்று ITC தெரிவித்துள்ளது.
தற்போதைய அட்டவணையின்படி ஜெபல் அல் தன்னா போர்ட் மற்றும் டல்மா ஐலேண்டிற்கு இடையே மற்றும் சாதியத் மற்றும் அல் அலியா ஐலேண்டிற்கு இடையே ஃபெர்ரி சேவைகள் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.