துபாய்: புர்ஜ் அல் அரப், புர்ஜ் கலீஃபா எல்லாம் இப்போதான்… 56 வருடங்களாக கெத்து காட்டும் தேரா க்ளாக் டவர் பற்றி தெரியுமா..?

உலகளவில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் என்று சொன்னால் அனைவரின் நினைவுக்கும் வருவது வானளவில் உயர்ந்து நிற்கும் கோபுரங்களும் வணிக வளர்ச்சியும் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளும் தான்..
ஆனால் அதுவே ஒரு 30 முதல் 40 வருடங்கள் பின்னோக்கி சென்றோமானால் அமீரகம் இந்தளவு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. புர்ஜ் கலீஃபாவும் இல்லை.. புர்ஜ் அல் அரபும் இல்லை.. மொத்தத்தில் சொல்லப்போனால் உயரமான கட்டிடங்கள் என்றே ஒரு சில கட்டிடங்கள்தான் இருக்கும். பெரும் பகுதி பாலைவனமாக காணப்பட்டாலும் அப்பொழுதும் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பிழைப்பு தேடி அமீரகம் வந்து கொண்டுதான் இருந்தார்கள்.
அவ்வாறு வந்தவர்களுக்கும் அமீரகத்தில் அப்போது உழைத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் துபாயின் நினைவுச் சின்னமாக இருந்தது தேராவில் உள்ள க்ளாக் டவர் தான். தேராவில் உள்ள ஒரு ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட இது இன்றளவும் பலரின் நினைவுகளை தன்னகத்தே கொண்டு தனித்து நிற்கிறது.
இன்றும் கூட, அப்பகுதியில் நேரத்தைச் செலவழித்த எவருக்கும் உடனடியாக அடையாளம் காணக்கூடிய அடையாளமாக இது உள்ளது.
1960 களின் முற்பகுதியில், துபாயின் ஆட்சியாளரான ஷேக் ரஷித் பின் சையத்தின் மகள், கத்தாரின் ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல் தானியை மணந்தார். ஷேக் அஹ்மத் பின்னர் ஷேக் ரஷீத்துக்கு ஒரு பெரிய கடிகாரத்தை பரிசளித்ததாக கூறப்படுகிறது.
ஷேக் ரஷீத்தின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கடிகாரத்தை வைத்து ஒரு அற்புதமான கோபுரம் கட்டுவதற்காக ஆஸ்திரிய கட்டிடக் கலைஞரான ஓட்டோ புலார்ட் அதற்கான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அவர் ஜபீல் அரண்மனையை வடிவமைத்து, ஜுமேராவில் துபாய் உயிரியல் பூங்காவைக் கட்டத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் நினைவுச்சின்னத்தை வடிவமைத்து கட்டும் பணி, கட்டிடக்கலை வடிவமைப்பு கட்டுமானத்துடன் கூடிய சிரிய கட்டிடக் கலைஞரான ஜக்கி அல் ஹோம்சியிடம் வந்தடைந்தது. இதனைக் கட்டி முடித்த ஹோம்சிக்கு அமீரக அரசு குடியுரிமையும் அளித்தது. அமீரகத்தில் வசித்து வந்த அல் ஹோம்சி 2017 இல் மரணமடைந்தார்.
துறைமுகத்திற்கு கப்பல் வழியாகவும் மற்றும் அப்போதைய புதிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு வரும் பார்வையாளர்கள் பார்க்கும் முதல் விஷயங்களில் இது ஒன்றாக இருக்க வேண்டுமென கருதி இந்த க்ளாக் டவரை கட்டுவதற்காக தேராவில் உள்ள ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அழகிய கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இந்த டவரானது, ஒரு வருடத்திற்குள் கட்டப்பட்டு 1965 இல் கட்டி முடிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, துபாயில் எண்ணெய் உற்பத்தியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஷேக் ரஷீத் மூலம் அக்டோபர் 1969 இல் எரியூட்டப்பட்ட சுடர் நினைவுச்சின்னம் இதில் இணைக்கப்பட்டது.
பின் 1970 களின் முற்பகுதியில், அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கடற்கரை மணலின் உப்புத்தன்மையின் காரணமாக அரிப்பு ஏற்பட்டு மோசமடையத் தொடங்கிய பின்னர் கான்கிரீட்டினால் பழுது பார்க்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் 1982 காலகட்டத்தில் அது மேலும் மோசமடைந்ததினால் பெரிய மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டு முழுமையாக மீண்டும் கட்டப்பட்டது.
பின்னர் துபாயில் போக்குவரத்தின் விரைவான வளர்ச்சி காரணமாக, புதிய பாதாள சாக்கடைக்கு இடமளிக்க இந்த கோபுரம் பல மீட்டர்கள் நகர்த்தப்பட்டது. இறுதியாக 2008 ஆம் ஆண்டில், மான்செஸ்டரில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த அசல் கடிகாரமானது மாற்றப்பட்டு, ஒமேகா நிறுவனத்தின் புதிய கடிகாரம் அதில் அமைக்கப்பட்டது.
இருப்பினும், 56 வயதாகும் இந்த நினைவுச்சின்னம் பழைய மற்றும் புதிய துபாய்க்கு இடையே மிகவும் விரும்பப்படும் இணைப்பாக உள்ளது. இது நகரின் மிக முக்கியமான கலாச்சார கட்டிடங்களில் ஒன்றாக துபாயின் கட்டிடக்கலை பாரம்பரியத் துறையால் பட்டியலிடப்பட்டுள்ளது.
தாயகத்தை விட்டு வேலை தேடி துபாய்க்கு வந்த பலரது வாழ்வில் குறிப்பாக சில வருடங்களுக்கு முன் வரை துபாயில் வசித்தவர்களுக்கு துபாய் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் பலவற்றில் இந்த க்ளாக் டவர் முக்கியமான ஒன்று என சொன்னால் அது மிகையாகாது.