மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வரும் ஜனவரி 8 ம் தேதி முதல் மதுரையிலிருந்து ஷார்ஜாவிற்கும், ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கும் இடையே நேரடி விமான சேவையை துவங்கவுள்ளது.
மதுரையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மட்டுமே நேரடி விமான சேவை இயக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது மதுரைக்கும் ஷார்ஜாவிற்கும் இடையே நேரடி விமான சேவை துவங்கவிருப்பதன் மூலம் மதுரை விமான நிலையம் வழியாக அமீரகம் பயணிக்கும் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை – ஷார்ஜாவிற்கு இடையே ஜனவரி 8ம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வாரத்தில் நான்கு நாட்களுக்கு விமான சேவையை வழங்கும் என்றும், மதுரையிலிருந்து ஷார்ஜாவிற்கு திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும், ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கு செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\
மதுரையிலிருந்து ஷார்ஜா வரும் விமானம், மதியம் 12:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 3:30 மணிக்கு ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று ஷார்ஜாவிலிருந்து மதுரை செல்லும் விமானம், அதிகாலை 2:15 மணிக்கு ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 7:50 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையிலிருந்து ஷார்ஜாவிற்கும், ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கும் ஜனவரி 8 முதல் இயக்கப்படவுள்ள விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவையும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. இது தவிர, ஷார்ஜாவிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களான மங்களூர் மற்றும் புனேவிற்கும் இடையேயும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேரடி விமான சேவையை துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும், மதுரையிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்கவும் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியாவிடம் தமிழகத்தின் தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டதாகவும், அப்போது தமிழகத்தில் ஏற்கனவே மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இருப்பதால் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தது.
எனினும், மதுரையிலிருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை கொண்டு அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

