அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிய 50 திர்ஹம்ஸ் கரன்சி நோட்டு அறிமுகம்..!! 50 ஆண்டை நினைவுகூரும் வண்ணம் பயன்பாட்டிற்கு வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் புத்தம் புதிய 50 திர்ஹம்ஸ் கரன்சி நோட்டு அமீரக தலைவர்கள் முன்னிலையில் இன்று பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிற எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் மற்றும் பட்டத்து இளவரசர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டுள்ளனர்.

புதிய 50 திர்ஹம்ஸ் கரன்சி நோட்டானது அமீரகத்தின் முதல் தலைமுறை ஆட்சியாளரும், அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கரன்சி நோட்டினுடைய முன்புறத்தின் வலதுபுறத்தில் மறைந்த ஷேக் சயீத் அவர்களின் உருவப்படமும், மையத்தில் அமீரக நாட்டின் நிறுவன தந்தைகளின் (founding fathers) நினைவுப் படமும், இடதுபுறத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவிடமான வஹாத் அல் கராமாவின் புகைப்படமும் அமைந்துள்ளது.

அதேபோன்று பின்புறத்தில் மறைந்த ஷேக் சயீத் தொழிற்சங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படமும், அதற்கு அடுத்ததாக எமிரேட்கள் ஒன்றாக இணைந்து ஸ்தாபனம் ஆன இடமும் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரக கொடி ஏற்றப்பட்ட இடமுமான எதிஹாத் அருங்காட்சியகத்தின் படமும் இடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தியாகிகளின் நினைவிடமான வஹாத் அல் கராமாவின் புகைப்படமும் அமைந்துள்ளது.

இந்த புதிய 50 திர்ஹம்ஸ் நோட்டே பாலிமர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள முதல் கரன்சி நோட்டு ஆகும். பாலிமர் மூலம் தயாரிக்கப்படும் நோட்டுகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பாரம்பரிய கரன்சி நோட்டுகளை விட நீடித்த மற்றும் நிலையானவையாக இருக்கும் என்றும், பாலிமர் மறுசுழற்சி செய்யக்கூடியதாக இருப்பதால் நாட்டின் கார்பன் தடயத்தைக் குறைக்க இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.

பொது பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய 50 திர்ஹம்ஸ் கரன்சி நோட்டுகள் விரைவில் ஏடிஎம்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. எனினும் தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வரும் பழைய 50 திர்ஹம்ஸ் நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாறுபட்ட வயலெட் நிறத்திலான இந்த புதிய ரூபாய் நோட்டில், ஃப்ளோரசன்ட் நீல நிற UAE நேஷனல் பிராண்டின் அடையாளங்கள் மற்றும் மேம்பட்ட இன்டாக்லியோ பிரிண்டிங் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் இதில் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண உதவும் வகையில் கண் தெரியாதவர்களுக்காக எழுத்து முறை சின்னங்களை மத்திய வங்கி சேர்த்துள்ளது. அத்துடன் கள்ள நோட்டுகளை தடுப்பதற்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் இந்த புதிய கரன்சி நோட்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!